கிளைமோர் குண்டுடன் முன்னாள் பெண் போராளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இயக்கச்சி பகுதியில் இருந்து கிழக்கை நோக்கி எடுத்து செல்கையிலேயே இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் அவரின் திட்டம் முறியடிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். கணவன் மற்றும் குழந்தை சகிதமே குறித்த பெண் சென்றுள்ளார்.
அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், இராணுவத்தினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். இலங்கையில் தாக்குதலொன்றுக்கு திட்டமிடப்பட்டதா என்ற கோணத்திலும் இவர்களை இயக்கியது யார் என்பதை கண்டறிவதற்கான புலன் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.
புலிகளின் வலயமைப்பு ஊடாகவே இவருக்கு உதவி கிடைத்துள்ளது எனவும், சுவிட்ஸர்லாந்தில் இருந்தே சிலர் இயக்கி இருக்ககூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
” உள்நாட்டில் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும், அவ்வமைப்பின் செயற்பாட்டாளர்கள் வெளிநாட்டில் உள்ளனர். அவர்கள்தான் இவ்வாறான செயல்களுக்கு தூண்டுதலாக இருக்கின்றனர். எனினும், அவ்வாறான செயல்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது.” என்றும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
இவர்களை கைது செய்த இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
