‘குடும்பக்கட்டுப்பாடு விவகாரம்’ -இ.தொ.காவுக்கு ஶ்ரீதரன் சாட்டையடி

மக்களின் ஒப்புதலின்றி குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ள முடியாது என்பதை இ.தொ.கா புரிந்து கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

மலையக மக்களின் பலவீனங்களை பயன்படுத்தி எவ்வாறு அரசியல் செய்வது என்பதில் சில அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அவற்றில் ஒன்றுதான் மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கதையளக்கும் நாடகத்தை அரங்கேற்ற முயற்சிப்பதாகும்.

மக்களின் ஒப்புதல் இல்லாமல் குடும்பக் கட்டுப்பாடு எதனையும் மேற்கொள்ள முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அதுமாத்திரம் அல்ல, அத்தகைய அநீதிகள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அப்படியே நடந்திருந்தாலும் கூட கடந்த அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி மாத்திரம் அங்கம் வகிக்கவில்லை.

இ.தொ.கா. தலைவராக இருந்த சிரேஷ்ட தொழிற்சங்க, அரசியல் முதிர்ச்சி கொண்ட முத்து சிவலிங்கம் பிரதியமைச்சராக இருந்ததை மறந்து விட முடியாது. அவரோ அல்லது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோ பாராளுமன்றத்தில் ஏன் எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இதுவரை பதவிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் செய்யாத, செய்யத் தவறிய மலையக சமூகத்தின் உரிமை சார்ந்த விடயங்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமுலாக்கப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா ஏழு பேர்ச் காணியில் தனிவீடுகள், அவற்றுக்கான காணி உறுதிப் பத்திரங்கள், நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு, மலையகதுக்கென தனியான அபிவிருத்தி அதிகார சபை, சுத்தமான குடிநீர்த் திட்டம், நவீன வசதிகளுடன் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மேற்கொள்ளப்பட்ட பணிகள் ஏராளம் உள்ளன.

இன்றைய அரசாங்கத்தில் புதிதாக எதனையும் செய்ய முடியாவிட்டாலும் நாம் ஏற்கனவே அறிமுகப் படுத்தி, தொடர முடியாமல் போன விடயங்களை தொடர்ந்து முன்னேடுத்தாலே நியாயமான அபிவிருத்திப் பணிகள் மக்களை சென்றடைந்து விடும். அதை விடுத்து கடந்த அரசாங்கத்தைக் குறை சொல்லி விமர்சித்து தமது இயலாமையை மூடி மறைத்து மக்களை ஏமாற்றக் கூடாது.

ஆகவே, கடந்த கால அரசாங்கத்தை விமர்சிப்பதால் எந்த விதமான பயனும் ஏற்படப் போவதில்லை. இன்றைய அரசாங்கத்தில் இ.தொ.கா. வுக்கு கிடைத்துள்ள அரசியல் அங்கீகாரத்தைக் கொண்டு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய தலா 20 பேர்ச் காணியில் “சிலப்” போடப்பட்ட தனி வீடுகள் முதலான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து மக்களின் அபிமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Related Articles

Latest Articles