கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு வரமா, சாபக்கேடா?

தொழில் தருநர்களுக்கும் தொழில் பெறுபவர்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தங்கள் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவை. சில நாடுகளில் அரச ரீதியான சட்ட ஆவணமாகவும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு உத்தரவாதம், தொழிலாளர்களின் பொது சுகாதார பாதுகாப்பு, தொழிலாளர்களின் அத்தியாவசிய தேவையான குடியிருப்பு, தாய்சேய் பாதுகாப்பு, குடிநீர், தொழிலாளர் பிள்ளைகளின் கல்வி, தொழில் காப்புறுதி எனப் பல சேமநலத் திட்டங்களுடன் உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவும், சேவைக்காலக் கொடுப்பனவும் ஊக்குவிப்புக்களும் இந்த கூட்டு ஒப்பந்தங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன.

ஆனால் இலங்கையில் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் தொடர்பாக செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தங்கள் தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தையே தருகின்றன.

தொழில் பாதுகாப்பு என்பது முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் மாதாந்தம் 22 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தவறின் அதற்கேற்ற முழுச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது முதலாளிமாருக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைந்திருந்தது. கட்டாயமாக தொழில் வழங்கியே தீர வேண்டும் என்பதால் தேயிலை, இறப்பர் தோட்டங்களைப் பாதுகாத்தார்கள், புல் வெட்டினார்கள், உரம் போட்டார்கள். இதனால் தோட்டங்கள் பாதுகாக்கப்பட்டன. தொழிலாளர்களுக்கு நிரந்தரமான தொழிலும் கிடைத்தது.

இன்று தேயிலை, இறப்பர் தோட்டங்கள் பற்றைக்காடுகளாகவே மாறி விட்டன. போதிய பராமரிப்பு இல்லை. விஷப்பாம்புகள், குளவிகள், காட்டு சிறுத்தைகள் குடிகொள்ளும் உறைவிடங்களாக மாறி விட்டன. குளவி கொட்டியும், பாம்பு தீண்டியும், சிறுத்தைகள் தாக்கியும் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் வேதனைகள் தொடர்கின்றன.

சம்பவம் நடந்தவுடன் தொழிற்சங்கத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கை விடுகின்றனர்.

ஆனால் நடப்பது ஒன்றும் இல்லை.தொழிலாளர்களின் மரணங்கள் வெறும் செய்தியாகவே மறைந்து விடுகின்றன.தேயிலைச் செடிகளுக்குள் காணப்படும் குளவிக் கூடுகளைக் முற்றாக அழித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எண்ணம் தோட்ட நிர்வாகங்களுக்கு இல்லை. அதைத் தட்டிக் கேட்கும் தைரியமும் தொழிற்சங்கங்களுக்கு இல்லை.

கூட்டு ஒப்பந்தங்களை செய்து விட்டால் மட்டும் போதாது. அதனை நடைமுறைப்படுத்தவும் தொழிற்சங்கங்கள் ஆவன செய்ய வேண்டும்.தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்கள் முதலாளிமாருக்கு சாதகமாகவே அமைந்து விட்டன.

கடந்த ஆறு வருடங்களில் பல ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நிரந்தர தொழில் அற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். பெருந்தொகையான தோட்டக் காணிகள் மூடப்பட்டு தரிசுகளாக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டத்துறை பேரழிவுக்கே இட்டுச் செல்லப்படுகின்றது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

காலம் காலமாக பெருந்தோட்டத் துறையையே நம்பியிருக்கும் தொழிலாளர்களின் எதிர்காலம் சூனியம் ஆக்கப்படுகின்றது.தோட்டங்களில் தொழில் இல்லாததனாலேயே மலையக இளைஞர், யுவதிகள் தூரப் பகுதிகளுக்கு தொழில் தேடிச் சென்றனர்.

தோட்டங்களை விட்டு வெளியேறிய இளைஞர்கள் இன்று கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தோட்டங்களுக்கே திரும்பி விட்டனர். வருமானமின்றி அவர்கள் உள்ளனர். ஒவ்வொரு தோட்டத்திலும் பெருந்தொகையான இளைஞர், யுவதிகள் இருக்கின்றனர். இவர்களுக்கு தொழில் வழங்க முடியாவிட்டாலும், தோட்டங்களில் தரிசாக கிடக்கும் காணிகளை வழங்கினால் அவர்கள் விவசாயம் செய்ய முடியும்.

தோட்டங்களில் தொழிலாளர்களின் பல சலுகைகள் இன்று ஒழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லயத்திற்கு லயம் துப்புரவுத் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தினசமும் தொழிலாளர்களின் குடியிருப்புகளை சுற்றி துப்புரவு செய்தனர். தோட்ட வைத்தியர் என ஒருவர் இதனை மேற்பார்வை செய்வார்.

தோட்டத்தில் வேலைக்குப் போகாதவர்கள், வயோதிபர்கள், குழந்தைகள் என பரிசோதித்து மருந்து கொடுப்பார்கள். பாடசாலைக்கு செல்லாத வயதில் இருக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாகப் பகல் உணவும் வழங்கினார்கள்.

ஆனால், தோட்டங்கள் புதிய கம்பனிக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் இந்த சலுகைகள் எல்லாம் இல்லாமல் போய் விட்டன. வைத்தியசாலைகள் என்ற பெயரில் ​வைத்தியரும் மருந்தும் இல்லாத கட்டடங்கள் அங்கு இருக்கின்றன. தொழிலாளர்களின் அத்தியாவசிய நலன்புரித் திட்டங்கள் கூட்டு ஒப்பந்தம் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இரா. புத்திரசிகாமணி

Related Articles

Latest Articles