கூடவே இருந்து இறுதிநேரத்தில், குழிபறித்துவிட்டு மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுக் கூட்டம் தீர்மானித்தபோதே, அரவிந்தகுமார் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தால், அவரது அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால், நம்பவைத்து இறுதி நேரத்தில் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார் என்று பழனி திகாம்பரம் எம்.வி. தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தச் சட்டத்திற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சியான மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் இறுதிநேரத்தில் ஆதரவாக வாக்களித்தமை குறித்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள பழனி திகாம்பரம்,
‘ஜனநாயகத்தைக் குழிதோட்டி புதைக்கும் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்து விட்டு தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார். பொதுத் தேர்தலில் போட்டியிடும் போதே ஐக்கிய மக்கள் சக்திக்கு அரசாங்கம் அமைக்க முடியாது என்பது சிறுபிள்ளைக்குக் கூட தெரியும். ஆனாலும், நாம் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டோம். மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்துடன் இருக்க வேண்டும், சலுகைககள் வேண்டும் என்ற நினைத்திருந்தால் அன்றே அவர் மொட்டுக் கட்சியில் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் கூடவே இருந்து குழிபறித்து, துரோகம் செய்துவிட்டு, தற்போது கதை சொல்கிறார்.
20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானித்தபோதே, அரவிந்த குமார் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தால், அவரது அரசியல் நேர்மைத்தன்மையை மெச்சியிருக்கலாம். ஆனால், இறுதி நேரத்தில் கூடவே இருந்து மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார். 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். சிறுபான்மையினரே இதனால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அவை அனைத்திற்கும், இந்தத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்த குமார் உள்ளிட்ட சிறுபான்மை உறுப்பினர்கள் பொறுப்பு சொல்ல வேண்டும். அத்துடன், மக்களைக் காட்டிக்கொடுத்த அரவிந்தகுமாருக்கு மக்களே நல்ல பாடம் புகட்டுவார்கள்.’ என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.