‘கொட்டகலையில் ஓர் தோட்டத்தையே முடக்கிய குளவிகள்’

கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத்துக்குட்பட்ட வெளிங்டன் பிரிவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (31) காலை தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும்போதே குளவிகள் கொட்டியுள்ளன. அத்துடன், அவ்வீதியூடாக பயணித்தவர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர் எனக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து தோட்ட மக்கள் இன்று தொழிலுக்கு செல்லாது, குளவிக்கூடுகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். இதனால் சிறுவர் முன்பள்ளியின் கற்பித்தல் நடவடிக்கையும் இன்று நிறுத்தப்பட்டது. மேற்படி தோட்டத்தின் இயல்பு வாழ்க்கை இன்று முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.

குளவிக்கொட்டுக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். ஏனைய சிலர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். அத்துடன், மேற்படி தோட்டத்திலுள்ள குளவிக்கூடுகளை அகற்றி தமக்கான தொழில் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொடுக்குமாறு தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நாளாந்தம் குளவிக்கொட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. இதனால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் இன்னும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. எனவே, இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

பொகவந்தலாவ நிருபர் – எஸ்.சதீஸ்

Related Articles

Latest Articles