‘கொரோனா’விலும் அரசியல் நடத்தும் அரசு – ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

” அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது .அதனை தொடர்ந்து 20 ஆவது திருத்த சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அரசாங்கம் இன்று தன்னுடைய அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்து கொண்ட பின்பு கொரோனாவை கைவிட்டு செயற்படுகின்றது.

அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது. அதற்கான உரிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்த முடியாமல் தடுமாறுகின்றது.” என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் (27.10.2020) இன்று மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் இன்று கொரோனா கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.குறிப்பாக மலையக பகுதிகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் பாரிய அளவில் தொற்று அதிகரித்து வருகின்றது.ஒரு சில நகரங்களை மாத்திரம் மூடுவதனால் மாத்திரம் இதனை கட்டுப்படுத்த முடியாது.

ஏற்கனவே இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அதாவது மார்ச் மாதம் அளவில் மிக குறைவான கொரோனா தொற்றாளர்களே இலங்கையில் இருந்தனர்.இதன்போது முழு நாட்டையும் முடக்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று பல மடங்காக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டை முடக்காமல் ஒரு சில நகரங்களையும் ஒரு சில பகுதிகளை மாத்திரம் முடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது எந்தளவு பொறுத்தமான செயற்பாடு என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

முழு நாட்டையும் முடக்கினால் மீண்டும் 5000 ரூபா வழங்க வேண்டும்.அதனை வழங்குவதால் அரசாங்கத்திற்கு எந்தவிதமான இலாபமும் இல்லை.கடந்த முறை வழங்கிய பொழுது அது தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.இதன் காரணமாகவே கட்சி ரீதியாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் இன்றைய நிலையில் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடு திருப்தி அடைய முடியாத நிலையிலேயே இருக்கின்றது.

அரசாங்கத்தின் நோக்கமெல்லாமல் 20ஆவது திருத்த சட்டத்தை வெற்றி கொள்வதிலேயே இருந்ததே தவிர வேறு விடயங்களில் அக்கறை செலுத்தவில்லை. நாட்டு மக்களின் நலன் தொடர்பான சிந்தனையோ பொருளாதார பின்னடைவு தொடர்பான சிந்தனையோ எதுவும் இல்லை.

எனவே அரசாங்கம் ஏனைய விடயங்களை ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் மலையக பகுதிகளில் பல இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களையும் ஏனைய விடயங்களையும் செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles