” கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் கூட்டங்களில் வைத்தியர் அனில் ஜயசிங்க இனி பங்கேற்பார்.” – என்று சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி., ஹேஷா விதானகேவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட அனில் ஜயசிங்க சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதவி உயர்வு வழங்கும் வகையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பான கூட்டங்களில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பேச்சாளராக ஜயருவன் பண்டார தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டார். அதன் அடிப்படையிலேயே அவர் அப்பதவியில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.” – என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.