ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த 20 ஓவர் உலக கிண்ண போட்டித்தொடர், கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
7ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
ஆனால் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசின் கோரதாண்டவம் ஆஸ்திரேலியாவையும் விட்டுவைக்கவில்லை. அங்கு நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு அங்கு பாராளுமன்றம் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளது.
இத்தகைய சூழலில் 16 அணிகளை ஒரே சமயத்தில் வரவழைத்து, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது என்பது சாத்தியல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே வெளிப்படையாக தெரிவித்து விட்டது.
இதனால் இந்த உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனாலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த 2 மாதங்களில் ஐ.சி.சி. மூன்று முறை ஆலோசித்தும் உலக கோப்பை விவகாரத்தில் அவசரம் காட்டமாட்டோம் என்று கூறியது.
இந்த நிலையில் ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆலோசனை நடத்தினர். இதன்பிரகாரமே போட்டித் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 2021 ஒக்டோபர் முதல் நவம்பர் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.