” கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது. எனவே, அடுத்துவரும் நாட்கள் அவதானம்மிக்க காலப்பகுதியாகும். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டு மக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும்.” – என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எமக்கு முன்னால் பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது, அது இன்னும் குறையவே இல்லை. நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது. இதனால் எதிர்காலம் என்பது அவதானம்மிக்க காலப்பகுதியாகும்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார தரப்பினரும், பாதுகாப்பு துறையினரும் முழுவீச்சுடன் செயற்பட்டுவரும் நிலையில் அதற்கு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தமக்கு கொரோனா தொற்றாத வகையில் சுகாதார பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்பதுடன், மற்றையவருக்கு எம்மூலம் தொற்றாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
தற்போது நாளாந்தம் 7 ஆயிரம்வரையில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயலிழந்துள்ள இந்திரமும் சரிசெய்யப்படும். சீனாவில் இருந்து துறைசார் நிபுணர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தனிமைப்படுத்தல் நடவடிக்கை என்பது சிறைப்பிடிப்பு – சிறைவைப்பு அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். உங்களினதும், உங்கள் உறவினரது நலன்கருதியுமே தனிமைப்படுத்தல் நடவடிக்கை இடம்பெறுகின்றது. மக்கள் பாதுகாப்புக்காகவே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. தனிமைப்படுத்தல் முகாமில் அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே ,தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்வதற்கு எவரும் அச்சம் கொள்ளவேண்டியதில்லை.” – என்றார்.