கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வைவரியற்ற வர்த்தக கட்டடங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல், திறக்கப்படவுள்ளதாக துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பிரியத்பந்து விக்கிரம இதுதொடர்பில் தெரிவிக்கையில், மேற்படி கட்டடத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதுடன் அடுத்த வருட ஏப்ரல் மாதத்தில் அதனைத் திறக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி தீர்வை வரியற்ற வர்த்தக கட்டடங்களை செயற்படுத்தும் நிறுவனங்கள் உலகின் பிரசித்திபெற்ற மூன்று நிறுவனங்களாகும் என்றும் தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய தீர்வைவரியற்ற வர்த்தக கட்டடத் தொகுதியாக இது அமையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இவ் வரியற்ற வர்த்தக கட்டடங்களில் நாட்டில் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கான தடைகள் கிடையாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் முஸ்தபா வர்த்தக கட்டடத் தொகுதி மிகவும் பாரியதொன்றாகும். அதேபோன்று கொழும்பு துறைமுக நகரத்திலுள்ள தீர்வைவரியற்ற வர்த்தக கட்டடமும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதாக அமையுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
