கொவிட்-19 சுகாதார விதிமுறைகளை மீறிய ரமேஸ்வரன் எம். பி. மீது நடவடிக்கை : கந்தப்பளை தோட்ட கம்பனி

கந்தப்பளை பார்க் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறையை தோட்ட உரிமையாளர்கள் மறுப்பு, குற்றவாளிகள் மீது விசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவிப்பு

(கந்தப்பளை பார்க் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தோட்டக் கம்பனிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களுக்கு எழுத்துமூலம் வழங்கியுள்ள பதில்களும், அவர் தரப்பு கருத்துக்களும் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.)

  • வன்முறையை தூண்டியதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதி நிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ரமேஸ்வரன் மீது பொலிஸில் முறைப்பாடு.
  • கடுமையான தாக்குதலுக்கு உள்ளான பயிலுனர் உதவி கண்காணி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
  • சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கு பக்கசார்பற்ற விசாரணைகளும் மற்றும் இழப்பீடுகளும் கோரப்பட்டுள்ளன.
  • கொவிட்-19 சுகாதார விதிமுறைகளை மீறிய நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2021 ஜனவரி மாதம் 17ஆம் திகதி கந்தப்பளையிலுள்ள பார்க் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து ஒட்டுமொத்த 21 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) மற்றும் தோட்ட துரைமார் சங்கம் ஆகியன இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வன்முறைச் சம்பவத்தைத் தூண்டிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ரமேஸ்வரனுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வன்முறைத் தாக்குதலுக்கு இலக்கான குறித்த தோட்டத்தின் பயிலுநர் உதவி கண்காணி தொடர்ந்து நுவரெலிய தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு இலக்கானவர் அதிகாரி பலத்த காயமடைந்துள்ளதாகவும் இதனால் அவருக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரண்டு பஸ்களில் பெருமளவிலான கும்பலை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தோட்ட அதிகாரி வசித்த வீடு பெரும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அதனை விசாரணை செய்து நட்டஈட்டை அளவிடுவதற்கும் தோட்ட துரைமார் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது – சேதப்படுத்தப்பட்ட அனைத்து சொத்துக்களும் வரலாற்று மதிப்புள்ள சொத்துக்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரனின் நடத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது மற்றும் வெட்கக் கேடானது. இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த சட்டவிரோதமான செயலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் முகமாக நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் கோரவுள்ளோம். இதன்மூலம் சட்டத்தை நிலைநாட்ட எதிர்பார்த்துள்ளோம்.” என தோட்ட துரைமார் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன், தோட்ட கண்காணிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2021 ஜனவரி 17ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் 5.30 மணியளவில் உடனடி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தோட்ட கண்காணி தனது மாமனாரின் புற்றுநோய்க்கான மருத்துகளை வாங்குவதற்காக வாகனத்தில் கண்டிக்கு செல்லவிருந்தமையினால் அமைதியாகவும் மற்றும் பணிவுடனும் மாற்றுத் திகதியொன்றை வழங்கியுள்ளார்.

அதனால் அதிருப்தி அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன், தொலைபேசியின் ஊடாக தகாத வார்த்தைகளால் கண்காணியை திட்டியுள்ளார். அதற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் தோட்டத் தொழிலாளர்களிடம் கண்காணியின் மனைவியின் தொலைபேசி இலக்கத்தைக் கோரி கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு பல சாட்சிகள் உள்ளன.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன், பிரதேச சபைத் தலைவர் யோகராஜ் உடன் இணைந்து, ஒரு கும்பலைக் கூட்டி அவர்களை வன்முறைக்கு தூண்டுவதற்காக அந்தப் பகுதிக்கு வெளியே இருந்து இரண்டு பஸ்களில் தோட்டத்திற்குச் சென்றுள்ளார். மாலை 5.30 அளவில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் மற்றும் யோகராஜ் ஆகியோர் அத்துமீறி சட்டவிரோதமாக கும்பலுடன் பங்களா வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அந்த நேரத்தில் பங்களா வளாகத்திலிருந்த இளம் பயிற்சி உதவி கண்காணி, திடீரென நுழைந்த கும்பலைக் கண்டு பதற்றமடைந்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரனும் அவரது ஆதரவாளர்களும் யாரையும் வளாகத்திற்குள் நுழையவோ அல்லது அதைவிட்டு வெளியே செல்லவோ அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக வளாகத்திற்குள்ளேயே தடுத்து வைத்ததுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு செல்லவிடாது சுமார் 5 மணித்தியாலங்கள் வரை தடுத்து வைத்தனர்.

அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து, பயிலுனர் உதவி கண்காணி இறுதியாக பலத்த பாதுகாப்புடன் வளாகத்திலிருந்து வெளியே உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டு நுவரெலியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் தலைமையிலான கும்பலின் பலத்த தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கண்காணிக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் அவர் சுவாசக் கோளாறு மற்றும் சில காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரனும் அவரது கும்பலும் பங்களா வளாகத்தில் 24 மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையிட்டு டயர்களை எரித்துள்ளனர், கட்டடத்திற்கு சேதம் விளைவித்துள்ளனர், மற்றும் தோட்டத்தில் தொழில்புரியும் தொழிலாளர்களையும், நிறுவனத்தைச் சுற்றியுள்ள தோட்டத்தில் தொழில்புரிபவர்களையும் கட்டாய வேலை நிறுத்தம் செய்ய வைத்துள்ளனர் – இதனால் ஊழியர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளதோடு நிறுவனத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

“தோட்ட சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தோட்டங்களை நிர்வகிப்பதன் மூலம் தொழில்துறையையும் எமது தேசிய பொருளாதாரத்தையும் மிதக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) மேற்கொண்டுவரும் இந்த வேளையில், இவ்வாறான மூர்க்கத்தனமான வன்முறைகளால் எங்களது முயற்சிகள் செயலிழந்துள்ளதுடன் மற்றும் தொழிலாளர்களும் பெரும் பாதிப்பை அடைவார்கள்.

“இது நிதி ரீதியாக உண்மை, ஆனால் உலகளாவிய தொற்றுநோயின் பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினரின் முன்யோசனையில்லாத நடவடிக்கைகளால் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய சமூகங்களில் கொவிட் தொற்றுநோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளது. இந்த ஆபத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரனின் நடத்தை அவர்களின் பாதுகாப்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கலாம். இந்த செயற்பாடானது முற்றிலும் சட்டத்திற்கு முரணானதும், மன்னிக்க முடியாத ஒரு செயலாகும். அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும் அவரை சட்டத்தின் முன் நிறுத்த எவ்வித தடையும் இருக்காது என நாங்கள் நம்புகின்றோம்.” என தோட்ட துரைமார் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles