ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கும் முடிவை எடுத்துள்ள சம்பிக்க ரணவக்க,43 ஆம் படையணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் பணியில் இறங்கியுள்ளமையானது சஜித் அணியினரை கிலிகொள்ள வைத்துள்ளது என கொழும்பு அரசியல் களத்தில் கதை அடிபடுகின்றது.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்தே சம்பிக்க ரணவக்க, மேற்படி அரசியல் வியூகத்தை வகுத்துள்ளார் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமையை பெறுவதற்கு தயாரான சம்பிக்க ரணவக்க எதற்கு இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்ற வினாவுக்கு சஜித் அணியினரிடமும் தெளிவான பதில் இல்லை. அரசாங்கத்துக்குஎதிராக பல அணிகள் செயற்படுவது சிறப்பு என சஜித் அணியினர் கூறினாலும், அவர்கள் மத்தியில் ஒரு குழப்பநிலை இருப்பதை ஊகிக்கமுடிகின்றது.
இதன்காரணமாகவே 2024 இல் நடைபெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது தமது அணி வேட்பாளர் யார் என்பதனை தற்போதே வெளிப்படையாக அறிவிக்க ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமல்ல தமது கட்சி உறுப்பினர் அல்லாதவர்களுக்கு பொதுவேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்படாது என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.
சஜித்தின் பெயரை இவ்வாறு முன்னிலைப்படுத்தி, சம்பிக்க களமிறங்கமாட்டார் என்ற தகவலை சமூகமயப்படுத்துவதே மேற்படி அறிவிப்புகளின் கருப்பொருளாகும். எனினும், அரசியல் களத்தில் இறுதிநொடியில்கூட மாற்றங்கள் நிகழக்கூடும். இதன்காரணமாகவே சம்பிக்கவின் புதிய இயக்கம்மீது சஜித் அணி கண் வைத்துள்ளது.
’43 ஆம் பிரிவு’ எனும் அரசியல் இயக்கமானது, இது இலக்கமல்ல தலைமுறை என்ற மகுடனத்தின் கீழ் அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலின் பிறகு செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை இந்த இயக்கத்துக்கு இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்க்பபட்டுவருகின்றது.
1943 ஆம் ஆண்டில்தான் இலங்கையில் இலவசக்கல்விக்கான சட்டமூலம் இயற்றப்பட்டது. தரம் ஒன்று முதல் பல்கலைக்கழக கல்விவரை இலவசக்கல்வி வழங்கப்பட்டது. இதுவே இலங்கையில் சமூக வளர்ச்சிக்கு வித்திட்டது. எனவேதான் ’43’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.