வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு, இரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படும் இரண்டு இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ரூபா பெறுமதியான சிகரட்டுக்களை கலஹா பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கலஹா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவல் ஒன்றின் அடிப்படையில் கடந்த (11) ஆம் திகதி அதிகாலை தெல்தோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றினை பொலிஸார் சுற்றி வளைத்தனர்
இதன் போது குறித்த சிகரட்டுக்கள் அடங்கிய பெட்டி ஒன்றினை சந்தேக நபர் தலையில் சுமந்துகொண்டு பின் வழியாக தப்பியோட முயன்ற சந்தர்ப்பத்தில் பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையிலிருந்து மேற்படி சிகரட்டுகளை கலஹா தெல்தோட்டை மற்றும் நகரை அண்டியுள்ள தோட்டப்பகுதி வியாபார நிலையங்களுக்கும் விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
கம்பளை நிருபர்
