இன்றைய நவீன உலகில் வல்லரசு என்ற அந்தஸ்த்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில் விண்வெளி போட்டியையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே எழுதப்படாத விதியாக – நடைமுறையாக உள்ளது. அதுமட்டுமல்ல நாடுகளின் மதிப்பு, ஆதிக்கம் என்பனக்கூட இதில் தங்கியுள்ளது எனலாம். அந்தவகையில் சந்திரயான்-3 விண்கலத்தை சந்திரனில் வெற்றிகரமாக களமிறக்கி சரித்திர சாதனையை படைத்துள்ளது பாரத தேசம்.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக நிலவுக்கு விண்கலம் அனுப்பிய நாடு என்ற அந்தஸ்த்தையும், நிலவின் தென் துருவத்தில் விண்ணலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா தன் வசப்படுத்தியுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் கிடைக்கப்பெற்றுள்ள இந்த வெற்றியானது இந்தியாவை உலகில் உச்ச இடத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்பதுடன், இந்தியா எதற்கும் சளைத்த நாடல்ல என்ற செய்தியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மூட நம்பிக்கை உடைய நாடு, கல்லையும், மண்ணையும்கூட வழிபடுபவர்களே அங்குள்ளனர் என ஏளனவாக பேசியவர்களின் கண்ணத்தில் பளார்…, பளார்…என அடி விழும் வகையில்
ஆன்மீகம் மட்டுமல்ல தங்களுக்கு விஞ்ஞானமும் புரியும் என்ற பாணியில் தரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் இந்திய விஞ்ஞானிகள்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்குவரும்போது இந்திய பொருளாதாரம் 15 ஆவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் மூன்றாவது இடத்துக்கு வந்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்தியாவின் விண்வெளி சங்கமும் பக்கபலமாக அமையும் என்பது வெளிப்படை.
இந்தியாவின் இந்த மகத்தான சாதனைக்கு அரசியல் தலைமைத்துவமும் தம்மால் முடிந்தவற்றை செய்துள்ளது என்பதை கூறியாக வேண்டும். சந்திரயான்-2 முயற்சி முழுமையாக வெற்றியளிக்காதபோது விஞ்ஞானிகள் கதறி அழுத்தனர். அவர்களை கட்டியணைந்து ஆறுதல்கூறி பிரதமர் மோடி அவர்களை உற்சாகப்படுத்தினார். நம்பிக்கை அளித்தார். முயற்சி தொடர்ந்தது. இம்முறை சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் முத்தமிட்டபோது, தென்னாபிரிக்காவில் இருந்துபடியே இந்திய கொடியை அசைத்து வரவேற்று, விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தினார் பிரதமர் மோடி. இப்படியான அரசியல் தலைமைத்துவம் விஞ்ஞானிகளுக்கு நிச்சயம் உளவியல் பலத்தை வழங்கியிருக்கும், எதிர்காலத்தில் வழங்கும் என்பது வெல்லிடை மலை.
நிலவுக்கு சென்ற சந்திராயன் – 3 ஆய்வு பணிகளை ஆரம்பித்துள்ளது. நிலவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, அங்குள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பம் தாங்கும் தன்மை கொண்டதா என்பன உட்பட பல தரவுகளை சந்திரயான்-3 கண்டறியவுள்ளது. அது தொடர்பான தகவல்களையும் இஸ்ரோவுக்கு அனுப்பவுள்ளது. அத்துடன், பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகளும் சேகரிக்கப்படவுள்ளன. நிலவின் தென் துருவத்தில் நடக்கும் முதல் ஆய்வு என்பதால் இந்த ஆய்வு தகவல்களுக்காக ஒட்டு மொத்த உலகமும், விண்வெளி சார்ந்த அமைப்புகளும் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றன. இது விண்வெளி துறையில் முக்கிய திருப்பு முனையாக அமையும் என நம்பப்படுகின்றது.
பலம்பொருந்திய – முன்அனுபவம் உள்ள ரஷ்யாவால்கூட தென்துருவத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக இறக்க முடியாமல்போன நிலையில், அதனை இந்தியா செய்து காட்டியுள்ளமையும், விண்வெளி வர்த்தகத்திலும் இந்தியா வெற்றிநடைபோடும் என்பதை பறைசாற்றி நிற்கின்றது.
நிலவின் தென் துருவம் பொக்கிசமாக கருதப்படுகின்றது. உறைநிலையில் தண்ணீர் இருக்கிறது எனவும் கூறப்படுகின்றது. அங்குள்ள தாது பொருட்களை பூமிக்கு எடுத்துவருவதிலும் போட்டிகள் உருவாகக்கூடும். அதேபோல இது செவ்வாய்கிரக ஆராய்ச்சியில் அடுத்தகட்டத்துக்கு செல்லவும் உதவும் என விண்வெளி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விண்வெளி துறைசார் நடவடிக்கையில் முதலிடுவதற்கு பல தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதன்மூலம் இந்தியாவில் வெளிநாட்டு முதலீ டுகள் அதிகரிக்கும் எனவும், விண்வெளி போட்டியில் தவிர்க்க முடியாத பங்கை இஸ்ரோ வகிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆக உலகில் பலம்பொருந்திய பொருளாதார சக்தி என்ற இலக்கை இந்தியா அடைவதற்கான வழிகளை சந்திரயான்-3 இலகுப்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இந்தியாவின் இந்த விண்வெளி சாதனைக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்திலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த சாதனையை இலங்கையர்களும் கொண்டாடிவருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு உணர்வுடன் சம்பந்தப்பட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா இன்று வலுவான நிலையில் உள்ளது. உலகில் முதலிடம் என்றுகூட சொல்லாம். எனவே, அதிலிருந்து இலங்கையுடன் அனுபங்களை பெற்றுக்கொண்டு, முன்னோக்கி பயணிக்க முற்பட வேண்டும்.