சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்க விரைவில் செயல்முறையொன்று உருவாக்கப்படும் என்று அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன் தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுச்சேவைகள், மாகண சபைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைச்சின் ஆலோசனைக்குழு முதன்முறையாக நேற்றுக் (23) கூடியபோது, பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பியகேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்குள் ஓய்வுபெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளை சேகரிக்குமாறு குறித்த குழு ஓய்வூதியத்திணைக்களத்திற்கு அறிவுறுத்தியது. ஓய்வூதியம் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் ஓய்வூதியத்தை பாதிக்கும் காரணிகளை மறு ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இங்கு விவாதிக்கப்பட்டது.
பொது சேவையில் இருந்து ஓய்வுபெறும் அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்தும் இதன்போது கவனம்செலுத்தப்பட்டது.
மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவது தொடர்பாக கௌரவ பிரதமரிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குழுவில் தெரிவித்தார். விகிதாசார பிரதிநிதித்துவம் அல்லது கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து கௌரவ பிரதமரிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணய செயற்பாடுகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் கீழ் இதற்காகத் தனியான ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பிரதேச அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது குறித்தும் இக்குழு விவாதித்ததுடன், புதிய தேர்தல் முறையும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தும் இங்கு முன்வைக்கப்பட்டது. பிரதேச சபை உறுப்பினர்கள் முறையற்ற வகையில் நடத்தப்படுகின்றமை இன்று ஒரு பிரச்சினையாகிவிட்டது.
உள்ளாட்சித் தேர்தல் முறையின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். உள்ளூராட்சி அமைப்புகளுக்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.