ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாடானது, அரசியல் ஏமாற்று வித்தையெனில் அதிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி வெளியேறும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
” சர்வக்கட்சி மாநாட்டில் பேசப்படும் விடயங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் பற்றி எமக்கு இன்னும் தெரியாது. நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் குறித்து பேசப்படும் என ஊகிக்கின்றோம். இது தொடர்பில் அரச தரப்புக்குள்ளேயே மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. எனவே ,இது விடயம் தொடர்பில் அரசின் உறுதியான நிலைப்பாடு அவசியம்.
நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன் கருதியே நாம் பேச்சுக்கு செல்கின்றோம். கலந்துரையாடல் நடைபெறும்வேளை, இந்த பேச்சுமூலம் நாட்டுக்கு நன்மை பயக்காது, இது அரசியல் ஏமாற்று வித்தையென தெரியவந்தால் பேச்சில் இருந்து வெளியேறுவோம்.” – என்றார்.
