” தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது. எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும்.” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
“ இலங்கையில் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மீது இன வன்முறைகளை பிரயோகித்து வருகின்ற தரப்புகளில் பொலிஸாரும் உள்ளடங்குகின்றனர்.
ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது.
எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் என்பதற்கு இது நல்ல ஒரு உதாரணமாகும்.
ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம் தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது எனது கைது எடுத்துக்காட்டுகின்றது.
அதாவது எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தரப்பு பொலிஸ் என்பதால் அந்த தரப்பையும் விசாரிக்க வேண்டிய பொறுப்பு பொலிசாரிடம் இருப்பதனால் விசாரணைகளை பக்கச் சார்பாக முன்னெடுத்து எங்கள் மீது ஒரு அடக்குமுறையை பிரயோகிக்கின்ற வகையிலேயே இந்த சம்பவம் கைது சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
இந்த சம்பவத்தை நாங்கள் மிகத் தெளிவாக நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம்.
அந்த அடிப்படையிலே குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகள் மட்டத்திலே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றில் தெரிவித்தோம்.” எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.










