சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அழித்துவிடுவோம் என்றும், சிந்து நதி நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்போம் என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின்னர் சையத் அசிம் முனீர் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார்.
வாஷிங்டன் டி.சியில், டம்பாவில் பாகிஸ்தானின் கவுரவ தூதர் அட்னான் ஆசாத் நடத்திய கருப்பு-டை இரவு விருந்தில் பங்கேற்ற அசிம் முனீர்,
“சிந்து நதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல. சிந்து ஆற்றை நிறுத்துவதற்கான இந்திய திட்டங்களை தடுப்பதற்கான ஆற்றல் எங்களிடம் உள்ளது. சிந்து நதியில் இந்தியா அணை கட்டுவதைத் தொடர்ந்தால், பாகிஸ்தான் தனது நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாக்கும். இந்தியா ஒரு அணை கட்டும் வரை நாங்கள் காத்திருப்போம், அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அதை அழித்துவிடுவோம்.
காஷ்மீர் பாகிஸ்தானின் “கழுத்து நரம்பு”. அது இந்தியாவின் உள் விவகாரம் அல்ல, தீர்க்கப்படாத சர்வதேச பிரச்சினை. “ஆபரேஷன் சிந்தூர்” என்பது பாகிஸ்தானின் இறையாண்மையின் மீதான இந்தியாவின் கடுமையான மீறல்” என்று அவர் பேசியதாக தி டானில் இன்று வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களைத் தணிப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பங்களிப்புக்கு முனீர் நன்றி தெரிவித்தார்.