சிரிய இராணுவத்தினருக்கு கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களை பாதுகாப்பாக அகற்றுதல் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டம் குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், 2024ஆம் ஆண்டு சிரியாவில் முன்னாள் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், சிரிய இராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா மேற்கொள்ளும் முதலாவது பயிற்சி நடவடிக்கையாக இது அமையலாம்.
முன்மொழியப்பட்டுள்ள பல்தரப்பு பயிற்சித் திட்டம் இன்னும் அமெரிக்காவில் சட்ட ரீதியான தடைகளையும், சிரிய இராணுவத்தின் சில தரப்பினரிடையே சந்தேகங்களையும் எதிர்கொண்டு வருகிறது. எனினும், திட்டம் முன்னெடுக்கப்பட்டால், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்க இராணுவத்தின் சிறிய அளவிலான படையினர் சிரியா மற்றும் ஜோர்தானில் பயிற்சிகளில் ஈடுபடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்தில் அமெரிக்காவின் சுமார் 15 நட்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் இதில் இடம்பெறலாம்.
சிரிய பாதுகாப்புப் படையினருக்கு மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதால், பயிற்சிக்குத் தெரிவுசெய்யப்படும் படைப்பிரிவுகளை அமெரிக்கா சட்ட ரீதியாக பரிசோதிக்க வேண்டியுள்ளது. அதேவேளை, அமெரிக்கப் படைகளுக்கு சிரிய இராணுவ நிறுவனங்கள் மற்றும் முகாம்களுக்குள் அனுமதி வழங்குவது தொடர்பிலும் சிரிய பாதுகாப்புத் தரப்பில் சில தயக்கங்கள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால், அமெரிக்கா – சிரியா இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒரு ஆரம்பமாக அமையலாம்.
