பண்டாரகம,- அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரமிற்கு நேர்ந்த கொடுமை மீண்டும் நிகழாத வகையில் சிறுவர்களை பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரியுள்ளது.
சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரமின் கொலையுடன் தொடர்புடைய 29 வயதான சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணக்கு உட்படுத்த பொலிசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உறவினரான குறித்த சந்தேகநபர் 3, 5, மற்றும் 8 ஆகிய வயதுகளைக் கொண்ட பிள்ளைகளின் தந்தையாவார். அத்துடன் அவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். தம்மால் குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டதாக அவர் பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சிறுமி பாத்திமா ஆயிஷா கடந்த 27 ஆம் திகதி வீட்டுக்கு அருகில் உள்ள கடை ஒன்றுக்குச் சென்றிருந்தார்.
இதன் பின்னர் அவர் காணாமல் போயிருந்தார். பல மணிநேரம் கடந்தும் சிறுமி ஆயிஷா வீடு திரும்பாத நிலையில், அது தொடர்பில் அவரது பெற்றோர் பண்டாரகமை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த சிறுமி தமது வீட்டிற்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், இவ்வாறான கொடுமைகள் மீள இடம்பெறாத வகையில் பெற்றோர் தங்களது பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.
சிறுமி பாத்திமா ஆயிஷா, தமது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் சென்றிருந்தால் இவ்வாறு பரிதாபம் நேர்ந்திருக்காது.
இவ்வாறு மீள நிகழாத வகையில் சிறுவர்களை பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். சந்தேகத்திற்குரிய நபர்களுடன் சிறுவர்கள் பேசுவதைத் தடுக்க வேண்டும்.
நன்கு அறிந்தவர்களால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, அவ்வாறான செயற்பாடுகள் நிகழாத வகையில் பெற்றோர் அவதானமாகச் செயற்பட வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரமின் இறுதிக் கிரியை நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. சிறுமியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெரும் திரளான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
