சிறார் கதையாக ‘கப்புட்டு காக்கா’ எனும் நூலை எழுதுமாறு பஸில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் – என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே தெரிவித்தார்.
பஸில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளதால் அவரால் இதை செய்ய முடிவும் எனவும் நகைச்சுவை பாணியில் கருத்து வெளியிட்டார்.
கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ள நூல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ தான் எழுதிய நூலுக்கு கோட்டாபய ராஜபக்ச தெரிவுசெய்துள்ள தலைப்பு தவறு. “மரணபீதியில் ஓடிய நான்” எனும் தலைப்பைதான் அவர் தெரிவுசெய்திருக்க வேண்டும். அவரின் நூல் நகைச்சுவை நூலாகும். எனவே, எமது வாசிகசாலைகளில் உள்ள நகைச்சுவை நூல்களுடன் கோட்டாவின் நூலையும் வைப்போம்.
கோட்டாவின் ஆட்சியில் உண்பதற்கு இருக்கவில்லை, வரிசை யுகம் உருவானது. விவசாயம் அழிந்தது. பணவீக்கம் அதிகரித்தது. இதனால் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். எனவே, சூழ்ச்சி என குப்பைத்தனமான கருத்துகளைக்கூறி மக்களை போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது.
சீனி வரி மோசடி, இரசாயன உர புரட்சி, கள்ள குடும்பம் என்பன தொடர்பிலும் கோட்டாபய ராஜபக்ச நூல் எழுதினால் சிறப்பு.
அதேபோல கப்புட்டு காக்கா நூலை எழுதுமாறு பஸிலிடமும் கோருகின்றோம்.” எனவும் வசந்த முதலிகே குறிப்பிட்டுள்ளார்.
