சிறிலங்காவில் அரங்கேறும் சீனர்களின் மோசடிகளுக்கு இதோ மற்றுமொரு சான்று

இலங்கையில் வியாபாரம், முதலீடு என்ற போர்வையில் சில சீனப் பிரஜைகளால் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்பட்டுவரும் மோசடிகளானவை, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குகூட அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் அண்மையில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு மோசடியானது, சீனப் பிரஜைகளின் நகர்வுகள் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு தரப்பு கூடுதல் அவதானத்துடனேயே இருக்க வேண்டும் என்ற படிப்பினையையே உணர்த்துகின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.

கொழும்பு துறைமுகநகர் முதலீட்டாளர் என்ற போர்வையில் சீன பிரஜையொருவர் முன்னெடுத்துவந்துள்ள ‘பிரமிட்’ நிதி மோசடி தொடர்பிலும், அதற்காக அவர் வகுத்துள்ள திட்டங்கள் சம்பந்தமாகவும் பல திடுக்கிடும் சில தகவல்கள் பொலிஸ் விசாரணை ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

கடந்த 19 ஆம் திகதி பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சீன பிரஜையொருவராலேயே அம்முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது. சினிமா பாணியில் அரங்கேற்றப்பட்ட அந்த மோசடி நாடகத்தின் ஆரம்ப புள்ளியே அது.

“பொரளை பகுதியில் உள்ள எனது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 4 கோடி ரூபா பணத்தையும், சொத்துகளையும் சூறையாடி சென்றுள்ளனர்.” – என பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. தான் பெரிய முதலீட்டாளர், தனவந்தர் என அந்த நபர் ஒரு விம்பத்தை பொலிஸிலும் உருவாக்கியுள்ளார்.

அட, இவர் வெளிநாட்டு முதலீட்டாளராச்சே, விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக விசாரணைகள், மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கமைய விசாரணை அதிகாரிகளால் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையிலேயே சினிமா பாணியில் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த கள்ளக் கூத்தின் அம்சங்கள் அம்பலமாகியுள்ளன.

கூலிக்கு ஆட்களை வைத்தே களவு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது எனவும், பிரமிட் மோசடியை மறைப்பதற்காகவும், பணத்தை சுருட்டுவதற்காகவுமே இந்த நாடகம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரியவருகின்றது. சிசிரிவி கமரா காட்சிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில் இரு சீனப்பிரஜைகளும், அவர்களுக்கு உதவி இலங்கையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கொழும்பில் 7 வீடுகளை வாடகை அடிப்படையில் கொள்வனவு செய்து, அங்கிருந்தே சர்வதேச மட்டத்திலான பிரமிட் வணிகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும், இதன் பின்னணியில் உள்ள ஏனைய சீனப் பிரஜைகளை கைது செய்வதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்றிருந்தாலும் அங்கிருந்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

அத்துடன், இந்த குழுவிடமிருந்து பல வகையான சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே, இவர்கள் இலங்கையில் இருந்தவாறு சர்வதேச மட்டத்தில் வேறுபலவித சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

இது முதன்முறையல்ல இதற்கு முன்னரும் பல சீனர்கள் இலங்கையில் இருந்தவாறு இணையவழி மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளனர். ஏன் போலி கடவுச்சீட்டை பயன்படுத்திகூட வர்த்தகர் என்ற போர்வையில் அண்மையில் ஒருவர் நாட்டுக்குவந்த விவகாரமும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இலங்கையர்கள் பலர் இந்த பிரமிட் மோசடி வலைக்குள் சிக்கி – பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான கடுமையான சட்ட ஏற்பாடுகள் பற்றி நிதி அமைச்சும் பரிசீலித்துவருகின்றது. அதேபோல இப்படியான பிரமிட் வணிகம் பற்றி மத்திய வங்கியும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மத்திய வங்கியில் நிதி புலனாய்வு பிரிவொன்று உள்ளது, அந்த குழுவும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்பதை அவ்வப்போது அரங்கேறும் இப்படியான சம்பவங்கள் உணர்த்துவிட்டு செல்கின்றன.

இலங்கையில் சீனாவின் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதற்காக சீன ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. சீனாவில் உள்ள சிறைக்கைதிகள்கூட வேலைக்கு அமர்த்தப்படும் நிலை காணப்படுகின்றது. எனவே, இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் சீன பிரஜைகள் ஈடுபட்டுவருகின்றமையும் அதிகரித்துவருகின்றது. அதுமட்டுமல்ல விலங்கு வேட்டை சார்ந்த விடயங்களிலும் இந்நிலைமை நீடிக்கின்றது.

இது இலங்கைக்கு அவ்வளவு நல்லதல்ல. சிறிய குற்றம், பெரிய குற்றம் என குற்றங்களை வகைப்படுத்தக்கூடாது, குற்றமென்றால் அது குற்றம்தான். பிற்காலத்தில் பாரிய மோசடிகளுக்கு இது நேரடியாகவோ மறைமுகமாகவே வழிவகுக்க வேண்டும். எனவே, வெள்ளம் வர முன் அணைகட்ட வேண்டும் என்பதுபோல ஆரம்பத்திலேயே முடிவுகட்டிவிட வேண்டும்.

அந்தவகையில் இலங்கையில் முறையற்ற விதத்தில் பிரமிட் வியாபாரத்தை முன்னெடுத்துவந்த 9 நிறுவனங்களுக்கு அண்மையில் தடைவிதிக்கப்பட்டது. பிரமிட் மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் தண்டனைக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆராயப்பட்டுவருகின்றது. அதேபோல இலாபத்துக்கு ஆசைபட்டு, நம்பகத்தன்மையற்ற துறைகளில் முதலிட வேண்டாம் என மக்களிடம் அரசு கோரியுள்ளது.

மறுபுறத்தில் முதலீட்டாளர்கள் எனக்கூறிக்கொண்டுவரும் மோசடியான திட்டங்களை முன்னெடுப்பவர்கள் பற்றியும் விழிப்பாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது ஏனைய முதலீட்டாளர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

Related Articles

Latest Articles