பெருந்தோட்ட பகுதியில் 3 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட உதவி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் இராஜாங்க கல்வி அமைச்சராக இருந்தவர் எமக்கு பதில் கூறவேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டபகுதியில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை எவராலும் பெற்று கொடுக்க முடியாது என்றும், ஆயிரம் ரூபா என்பது ஒரு பெரிய பிரச்சினை இல்லையென்றும் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்தவர் கூறுகின்றார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் ஆயிரம் ரூபா போதாது. எனினும், வழங்கிய உறுதிமொழிபடி ஆயிரம் ரூபாவினை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அது தான் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையும்கூட.
மலையகத்தில் உள்ள பிரச்சார பீரங்கிகள் மிகசிறப்பாக தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேர்தல் பிரச்சாரத்தில் 1000 ரூபா ஆறுமுகன் தொண்டமான் வீடமைப்பு போன்ற விடயங்களை முன்வைத்தே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா பிரச்சினை என்பது இது ஒரு தொழிற்சங்கத்தை சார்ந்த பிரச்சினையாகும்.
இதற்கு நாம் அரசாங்கத்தை குறை கூற முடியாது. நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அழுத்தங்களையும் சலுகைகளை கொடுக்கும் போது பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவார்கள்.
மலையகத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள், ஜாம்பவான்கள் ஆகியோர் சிறுபிள்ளை தனமாக கூறி கொண்டு இருக்கிறார்கள்.ஜனாதிபதி ஆயிரம் ரூபா தருவதாக கூறினார், ஏன் வழங்கவில்லையென கேட்கிறார்கள்.
கடந்த அரசாங்கத்தின் போது கூட ஆயிரம் ரூபா சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு தருவதாக கூறினர். கடந்த அரசாங்கத்தில் உள்ள பிரதமர் கூட கூறியிருந்தார். 5 வருடகாலமாக இவர்களால் 50 ரூபாவும் வழங்க முடியவில்லை.
140 ரூபாவும் வழங்க முடியவில்லை. இறுதியில் மக்களுக்கான 5000 ரூபா கடன் தொகையினையும் வழங்க முடியவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் குறைவான வாக்கு வீதத்தினையே வழங்கியிருந்தார்கள்.
இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதி அனைவரும் நன்மை பெறும் வகையில் 5000 ரூபா வாழ்வாதார கொடுப்பணவை வழங்கினார்.
பொகவந்தலாவ நிருபர் – எஸ்.சதீஸ்