சிறுமி கடத்தப்பட்டு படுகொலையென சந்தேகம்! 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு!!

பண்டாரகம, அட்டலுகம பகுதியில் காணாமற்போயிருந்த 09 வயது சிறுமி இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அட்டுலுகம , எப்பிட்டமுல்ல பகுதியை சேர்ந்த 09 வயதான மொஹமட் அக்ரம் பாத்திமா அதீஷா எனும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அட்டுலுகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 04-இல் கல்விகற்கும் மாணவி, நேற்று காலை 10 மணியளவில் கோழி இறைச்சி வாங்குவதற்காக , அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.

எனினும், அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள அட்டலுகம பள்ளிவாசலை அண்மித்து காணப்படும் சதுப்பு நிலத்திலிருந்து இன்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய 04 குழுக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மொஹமட் அக்ரம் பாத்திமா அதீஷா தனது வீட்டை அண்மித்த கடைக்குச் சென்று தேவையான பொருட்களை கொள்வனவு செய்த பின்னர் மீண்டும் வீடு நோக்கி செல்கின்றமை CCTV கெமராவில் பதிவாகியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எனினும், CCTV கெமரா செயற்படாத, சிறுமியின் வீட்டிலிருந்து 150 அல்லது 200 மீட்டர் தூரம் கொண்ட பகுதியில் வைத்து சிறுமிக்கு ஏதோவொரு அனர்த்தம் நடந்திருக்கலாமென அவர் கூறினார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிறுமியின் உறவினர் ஒருவர் தொடர்பிலும் சந்தேகம் நிலவுகின்றது. தாய், தந்தை உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles