சீனாவில் இருந்து 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தரமற்ற கரிம உரங்கள் கப்பல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சீனாவிடமிருந்து இந்த உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக 6.7 மில்லியன் டொலர் பணம் செலுத்தப்பட்டிருந்தது. எனினும், தரக்குறைவான உரத்தை அனுப்பிவைத்ததால் அந்த உரத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு இலங்கை மிகப் பெரிய அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டதுடன், உரத்தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டிருந்தது. இரசயான உரத்திற்கு முற்றுப்புள்ளிவைத்த அந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இயற்கை உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அதிக அந்நியச் செலாவணி செலவிடப்படுவதால் இந்தத் தீர்மானத்தை கோட்டாபய ராஜபக்ச எடுத்திருந்தார்.
இந்தத் தீர்மானத்தால் உரமின்றி விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்திலேயே, 6.7 மில்லியன் டொலர் செலுத்தி சீனாவிடமிருந்து இயற்கை உரம் கொள்வனவு செய்யப்பட்டது. 20,000 மெட்ரிக் டன் செயற்கை உரத்துடன் ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இலங்கைக்கு வந்தது. எனினும், இந்தக் கப்பலில் கொண்டுவரப்பட்ட உரம் உரிய தரத்தில் இல்லை என்பது தெரியவந்தை அடுத்து இந்த உரத்தை இறக்குமதி செய்வதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சுமார் 70 நாட்களுக்கு மேலாக இலங்கை கடற்பரப்பில் இந்த சர்ச்சைக்குரிய உரக் கப்பல் நங்கூரமிட்டிருந்தது. தரம் குறைந்த உரத்தை இறக்குமதி செய்வதை மறுத்த நிலையில், நீண்ட நாட்களின் பின்னர் அந்தக் கப்பல் இலங்கை கடலில் இருந்து புறப்பட்டது.
இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்து சுமார் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் சீனாவிற்கு செலுத்தப்பட்ட 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா இதுவரை திரும்பிச் செலுத்தவில்லை. இந்த கப்பலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து, அந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட விவசாய உரத்தை இலங்கை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது. இதையடுத்து, விவசாய உரத்தை ஏற்றி வந்த கப்பல் இலங்கை கடற்பரப்பில் சுமார் 70 நாட்கள் இருந்த நிலையில் அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிலிருந்து மாயமாகியது. சுமார் 154 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல், பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலாகும்.
சீன உரத்தை ஏற்றிவந்த இந்த கப்பலை நிராகரிப்பதற்கான காரணத்தை தெளிவூட்டி, முழுமையான அறிக்கையொன்றை சீன தூதரகத்திடம் கையளித்துள்ளதாக விவசாய அமைச்சு அப்போது அறிவித்திருந்தது. உரிய நிறுவனங்களின் அறிக்கைகளை 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒப்படைத்ததாக குறித்த அமைச்சு அப்போது அறிவித்திருந்தது. அனுமதி வழங்கப்படாத கப்பலொன்றை பொறுப்பேற்கும் இயலுமை கிடையாது எனவும், அது சட்டத்திற்கு முரணானது எனவும் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்திருந்தார்.
இந்த உரத்தில் தீங்கு விளைவிக்கும் பதார்த்தம் உள்ளடங்கி உள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக, உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வு கூடமான சுவிஸ் எஸ்.ஜி.எஸ் நிறுவனத்திடம் அதன் மாதிரிகளை அனுப்பி வைக்குமாறு சீனா கோரியிருந்தது.
இந்த ஆய்வு கூடத்தினால் வெளியிடப்படுகின்ற பெறுபேறுகளை இரு நாடுகளும் நிபந்தனைகள் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சீனா அப்போது கோரியுள்ளது. தமது நாட்டு உரத்தில் தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்கள் காணப்படும் பட்சத்தில், நிபந்தனையின்றி, அதனை தாம் தமது நாட்டிற்கு கொண்டு செல்வதாகவும் சீனா கூறியிருந்தது. தீங்கு விளைவிக்கும் பதார்த்தம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், நிபந்தனைகள் இன்றி, பணத்தை செலுத்தி உரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சீனா அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், எந்தவித இணக்கப்பாடுகளும் எட்டப்படாத நிலையிலேயே குறித்த கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இருந்து பயணித்தது. எவ்வாறாயினும், இந்தக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா இதுவரை செலுத்தவில்லை என்பதே மிக முக்கியமானது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவி செய்வதைத் தவிர்த்து, மேலும் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் சீனா மீதான நம்பிக்கையை மேலும் சரிவடைச் செய்துள்ளது.