நானுஓயா பிரதேச மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கிய புரட்சி யுகம் மறைந்து சாதாரண மக்கள் பயன்படுத்தும் வைத்தியசாலைக்கு மனசாட்சியே இல்லாமல் நீர் விநியோகத் தடை செய்யும் இருண்ட யுகம் உருவாகி உள்ளதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நானுஓயா வைத்தியசாலைக்கு குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ள விடயம் குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து பழனி விஜயகுமார் மேலும் கூறுகையில்,
“சேற்று நீர், ஊற்று நீர் என கிருமிகள் நிறைந்த சுத்தமற்ற நீரை பருகி பல நோய்களுக்கு உள்ளான பெருந்தோட்ட மக்களுக்கு சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட சுத்தமானி குடிநீர் வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் உலக வங்கியின் நிதி உதவியில் மலையக மக்கள் வாழும் பகுதிகளில் குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக டன்சினன், பொகலந்தலாவ, நானுஓயா போன்ற பகுதிகளில் பல கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் நானுஓயா கிளாசோ தோட்டத்தில் 135 மில்லியன் ரூபா பெறுமதியில் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களால் மக்கள் பாவனைக்கும் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் ஊடாக நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று நன்மை அடைந்துள்ளன.
மக்களுக்கு நன்மை பயக்கும் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் அவர்கள் தலைமையிலான நல்லாட்சி யுகம் மறைந்து இன்று மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளை சுயநல அரசியலுக்காக தடுத்து நிறுத்தும் இருண்ட ஆட்சி நடக்கிறது.
நானுஓயா பிரதேச வைத்தியசாலை 37 மில்லியன் கடன் உதவியில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் நானுஓயா பிரதேச சபைத் தலைவர் வைத்தியசாலைக்கான குடிநீர் விநியோகத்தை தடை செய்துள்ளார். அதற்கு காரணமாக குடிநீர் கட்டம் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
வைத்தியசாலை என்பது இலவச பொது சுகாதார சேவை. தோட்டப்பகுதி மக்கள் இதன்மூலம் நன்மை பெற வேண்டிய நிலையில், புதிதாக திறக்கப்பட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்லும் நோயாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். அதற்கு பிரதேச சபைத் தலைவரின் நீர்விநியோகத் தடையே காரணம். தனது சுயநல அரசியலுக்காக பிரதேச சபைத் தலைவர் இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் கவலை அளிக்கிறது.
இந்த வைத்தியசாலை திறப்பு விழா ஆளும் அரசாங்கத்தின் அமைச்சர் சிபி.ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. எனவே இவர்களும் அந்த கூட்டணியில்தான் உள்ளார்கள். ஆளும் கூட்டணியில் புறக்கணிப்பு என்பதற்காக சாதாரண தோட்ட மக்கள் பயன்படுத்தும் வைத்தியசாலைக்கான குடிநீரை தடை செய்வது நியாயமா?
பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாமல் பட்டியலில் தலைவர் பதவி பெற்ற வேலு யோகராஜா இதற்கு பதிலளிக்க வேண்டும். இவ்வாறான சிறுபிள்ளைதனமான அரசியலை கைவிட்டு மக்கள் நல அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக நானுஓயா வைத்தியசாலைக்கான குடிநீர் விநியோகத்தை வழங்கி அங்கு மக்கள் நலன்பெற தேவையான அனைத்து வசதிகளையும் நானுஓயா பிரதேச சபை ஊடாக செய்து கொடுக்க வேண்டுகிறேன்” என பழனி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.