பதுளை மாவட்டத்தில் மாகாண அமைச்சராக இருந்து கொண்டு செந்தில் தொண்டமானே மக்களுக்கு அதிகளவு சேவை செய்துள்ளார். மாவட்டத்திற்கு அதிகளவு சேவையை நானே செய்தேன் எனக் கூறுபவர்கள் தமது அபிவிருத்தி பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட்டு மக்களிடம் சென்று வாக்கு கேட்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா முக்கியஸ்தருமான டி.வி. சென்னன் தெரிவிக்கின்றார்.
கிளன்-எல்பின் தோட்ட ஹிங்குருகம பிரிவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“செந்தில் தொண்டமான் முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்.அவர் பாராளுமன்றம் சென்ற பின்னர் எவ்வாறான சேவைகளை செய்வார் என்பதை மாகாண அமைச்சராக பதவி வகித்த போது நிரூபித்து காட்டியுள்ளார்.கெபினட் அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பினரோ செய்யாத அபிவிருத்தி பணிகளை அவர் மாவட்ட மக்களுக்கு செய்துள்ளார்.
பாகுபாடின்றி தோட்ட, கிராம மற்றும் நகர மக்களுக்கு இவரது சேவைகள் சென்றடைந்துள்ளன.
சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தில் வேலையில்லா யுவதிகளுக்கு தையல் இயந்திரம், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஓய்வூதியம் பெற்று இருப்பர்களுக்கு அரச நிவாரண கொடுப்பனவு, பாடசாலைகளுக்கு தளபாடங்கள், பாடசாலை கட்டிடங்கள் நிர்மாணம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு கல்விசாரா ஊழியர்களை நியமித்தல் போன்ற இவரது அபிவிருத்திகளை அடுக்கி கொண்டே போகலாம்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தானே அதிக சேவை செய்தாக கூறிக்கொண்டு இருக்கின்றார். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது ரோபேரி தோட்டம் தொடக்கம் நீட்வுட் தோட்டம் வரை 75 வீதமான தோட்டங்களுக்கு மின்சாரம் வழங்கினேன்.
அப்புத்தளை தம்பேத்தன வித்தியாலயம், பசறை தமிழ் தேசிய பாடசாலை, பாரதி கனிஷ்ட வித்தியாலயம் என்பவற்றிற்கு கட்டிடங்கள் அமைத்து கொடுத்துள்ளேன். மக்கள் பிரதிநிதிகளாக பதவி வகிப்பது சேவை செய்யவே இச்சேவைகளில் செந்தில் தொண்டமான் முதன்மையானவராக திகழ்கின்றார். எனவே ஆளுங்கட்சி ஊடாக இன்னும் பல சேவைகளை பெற அனைவரும் அவரை ஆதரித்து வெற்றி பெற செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.