செம்மணி புதைகுழி விவகாரத்தை மீள தோண்டுவதன்மூலம் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? புலிகளால் கொல்லப்பட்ட படையினரின் உடலங்கள்கூட அங்கு இருக்கக்கூடும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” யாழ். செம்மணி புதைகுழி தொடர்பில் தற்போது மீண்டும் பேசப்படுகின்றது. இவ்விகாரம் மீள தோண்டப்படுவதன் நோக்கம்தான் என்ன? இந்நாட்டில் போர் நிலவியது. பயங்கரவாதம் இருந்தது. மக்கள் கொல்லப்பட்டனர். படையினர் கொல்லப்பட்டனர். பாரிய அழிவுகள் ஏற்பட்டன.
கடையில் படையினர்தான் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்தினர்.
செம்மணி புதைகுழியில் இருப்பவை யாரினுடைய சடலங்கள்? பூநகரி மற்றும் ஆணையிறவின்போது படையினர், புலிகளால் கொல்லப்பட்டனர். சில உடல்களே கிடைக்கப்பெற்றன. எனவே, இவை இராணுவத்தினருடையவை என எம்மால் கூறமுடியும். இப்பிரச்சினையை மீள தோண்டி எதிர்பார்ப்பதுதான் என்ன?
எனவே, அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் செம்மணி விவகாரமும் யாசகரின் புண்கதைபோல் ஆகிவிடும். தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.