செய்யாத குற்றத்திற்காக 58 ஆண்டுகள் சிறைவாசம்! தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட காவல்துறை!

செய்யாத குற்றத்திற்காக 58 ஆண்டுகள் சிறையில் இருந்த நபரிடம் ஜப்பான் காவல்துறை தலைவர் ஒருவர் நேரில் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்தவர் ஐவா ஹகாமடா (88). முன்னாள் குத்துச் சண்டை வீரரரான இவர், கடந்த 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய ஜப்பானில் உள்ள ஹமாமத்சு பகுதியில் மிசோ பீன்ஸ் பேஸ்ட் நிறுவன ஊழியர் ஒருவரையும் அவரது குடும்பத்தினர் 3 பேரையும் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் காவல் துறையும் வழக்கறிஞர்களும் ஹகாமாடாவுக்கு எதிராக ஆதாரங்களை உருவாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அவருக்கு 1968ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தொடர் மேல்முறையீடு மற்றும் மறுவிசாரணை கோரிக்கை காரணமாக அவர் தூக்கிலிடப்படவில்லை. பின்னர், அவருடைய, முதல் மேல்முறையீடு 27 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

அடுத்து, அவரது சகோதரியால் கடந்த 2008ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மேல்முறையீடு 2014இல் விசாரணைக்கு வந்தது. அப்போது, மரண தண்டனையை ரத்துசெய்த நீதிமன்றம், விசாரணையை நிலுவையில் வைத்திருந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் மறுவிசாரணையின்போது அவர் நிரபராதி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இவர், உலகில் மரண தண்டனை கைதியாக நீண்டகாலம் சிறையில் இருந்தவராவார்.

இந்த நிலையில், செய்யாத குற்றத்திற்காக ஹகாமடாவுக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைத்ததற்காக ஷிசுவோகா மாகாண காவல்துறைத் தலைவர் தகாயோஷி சுடா, கடந்த அக்டோபர் 21ஆம் தேதி நேரில் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். தனது சகோதரியுடன் வீட்டில் இருந்த ஹகாமடாவைச் சந்தித்து அவரிடம் காவல்துறை சார்பில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அப்போது காவல்துறை அதிகாரி, ஹகாமடாவின் முன்னின்று வணங்கி, ”இந்த தண்டனைக் காலமான 58 வருடங்களில் உங்களுக்கும் வெளியில் சொல்லமுடியாத மன உளைச்சலையும், வலியையும் ஏற்படுத்தியதற்கு நாங்கள் வருந்துகிறோம். முறையாக விசாரிக்காமல் தண்டனை வழங்கிய எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார். மேலும், இனி வழக்குகளை சரியான முறையில் விசாரிப்பதாகவும் உறுதியளித்தார்.

ஹகாமடா நீண்டகாலமாக சிறையில் இருந்ததால் அவரின் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு முறையாக பேசக்கூட முடியாத நிலையில் இருந்தார். அவர் அந்த அதிகாரியிடம், “அதிகாரம் என்றால் என்ன? அதிகாரம் கையிலிருப்பதால் மட்டுமே நீங்கள் எவரையும் குற்றவாளியாகக் கருதக்கூடாது” என்றார்.

ஹகாமடாவின் 91 வயதான சகோதரி ஹிடெகோ இத்தனை ஆண்டுகால சட்டப் போராட்டத்திலும் அவருடைய சகோதரருக்கு துணையாக இருந்துள்ளார். தற்போது ஹகாமாடாவுடன் வசிக்கும் அவர், காவல்துறையினர் தங்களைச் சந்திக்க வந்ததற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், “இத்தனை வருடங்கள் கழித்து அவரைப் புகார் சொல்வதில் எந்த பயனும் இல்லை. அந்த காவல்துறை அதிகாரி இந்த வழக்கில் ஈடுபடவில்லை. அவர் தனது கடமையை செய்ய மட்டுமே இங்கு வந்தார்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

 

Related Articles

Latest Articles