” அரசியலமைப்பின் பிரகாரமே தற்போதைய ஆட்சி நிச்சயம் கவிழ்க்கப்படும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் ஜனநாயக வழியில் நாம் மேற்கொள்வோம். மக்களும் புதிய ஆட்சியையே வலியுறுத்தி நிற்கின்றனர்.”
இவ்வாறு டலஸ் அழகப்பெரும தலைமையிலான ‘சுதந்திர மக்கள் சபை’யின் முக்கியஸ்த்தரும், சட்டத்துறை பேராசிரியருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தற்போதைய அரசாங்கத்துக்கு இதயம் இல்லை, இரக்கமும் இல்லை. அதனால் மக்களின் அவலக்குரல் கேட்பதும் இல்லை. பிள்ளைகளுக்கு உண்ண உணவு இல்லை. பாடசாலை மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். இவற்றுக்கு தீர்வை தேடாமல் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாரம் 12 அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர் என அறியமுடிகின்றது.
அதுமட்டுமல்ல மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருக்கு வாகனமொன்றும், 300 லீற்றர் எரிபொருளும் வழங்கப்படவுள்ளது. நாட்டு மக்கள் திண்டாடும்போது , அமைச்சர்களின் சுகபோகங்களுக்காக அரச நிதியை பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி நடப்பதாக அரசாங்கம் சொல்கின்றது. இது தொடர்பில் விசாரணையும் இடம்பெறுகிறதாம். இது தொடர்பில் விசாரணை நடத்த அவசியமில்லை. அரசாங்கம்மீது மக்கள் அதிருப்தியிலேயே உள்ளனர். எனவே, ஆட்சியைக் கவிழ்க்க ஜனநாயக வழியில் நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். இதற்கான வாய்ப்பு எதிர்காலத்தில் உருவாகும். மக்களும் இதனையே எதிர்பார்க்கின்றனர்.” – என்றார்.










