” நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அமைச்சு பதவிகளை துறந்துவிட்டு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசில் இருந்து வெளியேறும். இதற்கு மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.”
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றிரவு கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு,
” அரசுடன் பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளன. ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது 15 விடயங்கள் முன்வைக்கப்பட்டன. சர்வக்கட்சி மாநாட்டில் 22 யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இவை தொடர்பில் இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
எனவே, தற்போதைய நிலையில் இடைக்கால அரசொன்று அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசில் இருந்து வெளியேறுவோம். அமைச்சு பதவிகளை துறப்போம். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு நாளை (இன்று ) கடிதம் அனுப்படும்.” – என்றார்.
அதேவேளை, நாட்டில் தற்போதுள்ள அமைச்சரவையை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் பேச்சு நடத்தி, பொது இணக்கப்பாட்டுடன் இடைக்கால அரசொன்றை அமைக்கவும் – என்று விமல், உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.