“ ஜனாதிபதி தேர்தலுடன் விளையாட முடியாது. எனவே, அரசமைப்பின் பிரகாரம் குறித்தொகுக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்கு அது நடந்தாக வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலை பிற்போடவே முடியாது. இது விடயத்தில் எந்த விளையாட்டும் எடுபடாது. எதிர்வரும் செப்டம்பர், ஒக்டோபரில் தேர்தல் நடத்தப்படும். இதற்கான அழைப்பை தேர்தல் ஆணைக்குழு விடுக்கும். தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின்கீழேயே தேர்தல் நடக்கும். அதில் மாற்றம் வராது.
அதேவேளை, நாட்டில் தற்போதுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைவிட பலமானதொரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே நாட்டுக்கு தேவை என்பதே எனது கருத்தாகும். இது எனது தனிப்பட்ட கருத்து, கட்சியின் நிலைப்பாடு அல்ல.
அப்படியானதொருவர் என நினைத்துதான் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தோம். ஆனால் அது நடக்கவில்லை.” – என்றார்.










