ஜப்பான் வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு: முதலீடு குறித்தும் உத்தரவாதம்

இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோவிற்கும் இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

ஜப்பானிய அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்த பாதுகாப்பு ஒத்துழைப்பு உதவித் திட்டத்தில் இலங்கையையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இசொமதா அகியோ தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத்தில் தேசிய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டுள்ளது.

அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் தூதுவர், ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்.
டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் விமான நிலைய முதலீடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

விரைவில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோ ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

Related Articles

Latest Articles