ஜி – 20 மூலம் கெத்து காட்டிய இந்தியா!

உலகில் பலம்பொருந்திய பொருளாதாரக் கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி – 20 உச்சி மாநாடு இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அம் மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தி முடிந்த இந்தியாவின் அணுகுமுறை குறித்தும், தலைமைத்து ஆற்றம் பற்றியும் பேசப்பட்டுவருகின்றது. இது பற்றி வெளிப்படையாக கருத்தாடல் இடம்பெறாத போதிலும் இராஜதந்திர வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

1999 ஆம் ஆண்டுதான் ஜி – 20 அமைப்பு உதயமானது, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அத்துடன் , 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியமும் ஜி – 20 கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் ஜி – 20 தலைவர்கள் ஒன்றுகூடி, உச்சி மாநாட்டை நடத்தி பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட உலக நிலைவரம் பற்றி ஆராய்கின்றனர். பிரகடனமும் வெளியிடப்படுகின்றது. இதில் முதலாவது ஜி – 20 அரச தலைவர்கள் மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது. அதன்பின்னர் சூழற்சி அடிப்படையில் தலைமைத்துவம் வழங்கப்படும். தலைமைத்துவம் வழங்கப்படும் நாட்டிலேயே அடுத்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும்.

அந்தவகையில் இம்முறை ஜி – 20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி இருந்தது. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் சந்திப்புகள், கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஜுன் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அரச தலைவர்கள் உச்சி மாநாடு நடத்தப்பட்டிருந்தாலும் 2022 டிசம்பர் முதலே ஜி – 20 மாநாட்டை ஒட்டிய கூட்டங்களில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இடம்பெற்றன.

நிதி அமைச்சர்களின் மாநாடு, வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு, மத்திய வங்கி ஆளுநர்களின் மாநாடு என முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இளைஞர், மகளிர், சுற்றுலாத்துறை, காலநிலை, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், எரிசக்தி, உணவு நெருக்கடி உட்பட பல அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவந்தன. அவற்றின்போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளையும் உள்ளடக்கிய வகையிலேயே 37 பக்கங்களில், உலக தலைவர்களின் ஒப்புதலுடன் டில்லி பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜி – 20 கூட்டமைப்பில் உள்ள நாடுகள், உலக அளவில் 85 சதவிகித உற்பத்திக்கும் 75 சதவிகித வர்த்தகத்திற்கும் பங்களிக்கின்றன. மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை இந்த நாடுகள் கொண்டுள்ளன. எனவே, ஜி – 20 மாநாடென்பது உலக பொருளாதாரத்தை, வர்த்தக ஓட்டத்தை நிர்ணயிக்ககூடியதொன்றாகும். அவ்வாறானதொரு அமைப்புக்கு தலைமையேற்று மாநாட்டை – மிகவும் நேர்த்தியான முறையில் இந்தியா நடத்தியிருப்பது அந்நாட்டுக்கு இனிவரும் காலப்பகுதியில் சர்வதேச அரங்கில் பல சாதக பிரதிபலன்களை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாதாரண சூழ்நிலையில் அல்ல, பொருளாதார நெருக்கடி, பூகோள அரசியல் போட்டி , ரஷ்ய – உக்ரைன் மோதல் போன்ற உலகளவிலான நெருக்கடி நிலைக்கு மத்தியிலேயே ஜி – 20 தலைவர்கள், பிரதிநிதிகள் டில்லியின் ஒன்றுகூடினர். இதனால் இறுதி இணக்கப்பாட்டை எட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும், டில்லி பிரகடனம் வெளிவராது, உக்ரைன், ரஷ்ய விவகாரத்தால் ஜி – 20 நாடுகள் பிளவுபடும் என்றெல்லாம்கூட சில இராஜதந்திர நிபுணர்கள் தகவல் வெளியிட்டிருந்தனர். எனினும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த இராஜதந்திர நகர்வுகளால் அந்நிலைமை ஏற்படவில்லை. அனைத்து நாடுகளினதும் இணக்கத்துடன் பிரகடனம் வெளிவந்துள்ளது.

உக்ரைன்மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மற்றும் இப்போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்கும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்ல, எனினும், அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். ரஷ்ய – உக்ரைன் போரில் இந்தியா நடுநிலைபோக்கை கடைபிடிக்கின்றது, ரஷ்யாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினால் அது மாநாடு குழப்பத்தில் முடிய வழிவகுக்கும் என்பதால், “ போர் அற்ற உலகம் அமைய வேண்டும். உக்ரைனில் நீடித்த அமைதிக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ள வேண்டும்.” என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், நாடுகள் , மற்ற நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டையும்

இறையாண்மையையும் மதித்து சர்வதேச சட்டங்களை

கடைபிடித்து நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமது உரையில்கூட இது போர்செய்வதற்கான சூழல் அல்ல என்ற கருத்தை பிரதமர் மோடி இடித்துரைத்திருந்தார். இது ரஷ்ய, உக்ரைனுக்கு மட்டுமல்ல முழு உலகுக்குள் சொல்லப்பட்ட செய்தியாக உள்ளது.

தேசிய நலன்போன்றே பொது நலன்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் உள்ளது. குறிப்பாக சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கியுள்ள நாடுகளின் நிலைகருதியே இந்த ஏற்பாடு உள்ளடக்கப்பட்டிருக்கலாம்.

உலகில் இன்று அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் சீனாவிடமிருந்து பெருமளவு கடன் பெற்றுள்ளன. இலங்கை மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. சீனாவிடமிருந்து பெருமளவு கடன் பெற்றுள்ளது. அதாவது வளர்ந்துவரும் நாடுகளில் பெற்றுள்ள கடனில் மூன்றிலிரண்டை சீனாவே வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகள் இருக்கையில், அதிக வட்டி உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டும், பொருளாதாரம்மூலம் பிறநாடுகளில் காலூன்றும் சீனாவின் தந்திரோபாயத்துக்கு மாநாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை நாடுகளுக்கு ஜி – 20 உதவ வேண்டும் என்பதால், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை கடன் பொறிக்குள் சிக்க வைக்கும் நடவடிக்கை ஏற்புடையது அல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பொருளாதார உதவிமூலம் பிற நாட்டுக்குள் காலூன்றும் சீனாவின் கைங்கரியத்துக்கு ஏதோவொரு விதத்தில் தடையேற்படுத்தவே மோடி இவ்வாறு செய்திருக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஆபிரிக்க ஒன்றியமும் 21 ஆவது நாடாக ஜி – 20 இல் இணைந்துள்ளது. எனவே, ஜி – 20 என்பது இனிவரும் காலப்பகுதியில் ஜி – 21 என அழைக்கப்படலாம். ஆபிரிக்க ஒன்றியத்தை ஜி – 20 இல் இணைப்பதற்கு மோடியின் வகிபாகமும் அளப்பரியது. தற்போதைய சூழ்நிலையில் சில ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருகின்றது. அங்கு ஏற்கனவே சீனா காலூன்றிவருகின்றது. எனவே, ஜி – 20 கட்டமைப்புக்குள் ஆபிரிக்க ஒன்றியம் இருப்பது சீன ஆதிக்கத்தை ஏதோவொரு விதத்தில் கட்டுப்படுத்தும் என நம்பலாம்.

உணவு பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க சக்தி, காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகளை தடுப்பதற்கான இலக்குகளை எட்டுவதற்கான செயற்பாடுகளை விரிவுபடுத்தல், பயங்கரவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமை, பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது உள்ளிட்ட காரணிகளும் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை காலத்தின் கட்டாய தேவையாகும்.

சந்திரனின் தென் துருவத்துக்கு விண்கலம் அனுப்பி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைந்த பின்னர், முழு உலகிலும் இந்தியா பற்றிதான் கதை, அதன் வளர்ச்சி பாதை பற்றிதான் ஆராய்ச்சி, அதேபோல ஜி – 20 அரச தலைவர்கள் மாநாடு நடைபெற்ற இரு நாட்களிலும் உலக நாடுகளில் இந்தியா பற்றிதான் பேச்சு, மாநாட்டை எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி, நடத்தி முடிப்பதற்கு அரச தலைவராக மோடி வழங்கிய தலைமைத்துவம், உலக தலைவர்களுடன் அவருக்குள்ள தொடர்பு என்பவற்றை பார்க்கும்போது, இந்தியா பொருளாதாரத்தில் முதலிடம்பிடிக்க வேண்டுமெனில் பிரதமர் மோடி போன்ற தற்துணிவான அரசியல் தலைமைத்துவம் அவசியம்.

Related Articles

Latest Articles