ஜெனிவாவில் இந்தியா நடுநிலை வகித்தமை ஈழத் தமிழர்களுக்கு இழைத்த மாபெரும் துரோகம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் துரோகமாகும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (23/03/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு,

“இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம்.

ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் எந்நாளும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இலங்கையின் நிர்ப்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன்? தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், வெளிநடப்பு செய்து நடித்துள்ளார்கள். இல்லாவிட்டால், இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள்.

வெளிநடப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு இலங்கை அரசு நன்றி சொல்லி இருக்கிறது. ஈழத் தமிழர்க்கு மோடி இழைத்திருக்கும் துரோகத்துக்குக் கிடைத்த பாராட்டு நன்றிப் பட்டயம்தான் இது” இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles