ஜே.ஆரின் வழியில் ஆட்சியைப் பிடிப்போம் – ரணில் உறுதி

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார உட்பட புதிய பதவிகளுக்கு தெரிவானவர்களை கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லத்தில் நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது கருத்து வெளியிட்ட அவர்,

1977களில் பெரும்பான்மையுடன் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றிய ஜே.ஆர். ஜயவர்தனவின் பயணத்தையே நாம் தொடர வேண்டியுள்ளது.

அன்று ஜே.ஆர். உடன் இருந்த அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல. என்.ஜீ.பி. பண்டிதரட்ண , எனது தந்தை எஸ்மன்ட் விக்கிரமசிங்க , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜீ.பி.சி. சமரசிங்க போன்றவர்கள் சிறந்த நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் ஆவர்.

மறுப்புறம் சிறில் மெத்திவ் , ஆர். பிரேமதாச , போல் பெரேரா , ஈ.எல். சேனாநாயக , வின்சன்ட் பெரேரா , காமினி மற்றும் லலித் போன்றவர்களும் இருந்தனர். இவர்கள் அனைவருமே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ய வில்லை.

ஆனால் இவர்களை இணைத்துக் கொண்டுதான் 1977 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சியை கைப்பற்றும் போராட்டத்தை தொடங்கினார். எனவே இவ்வாறான பயணத்தையே நாம் தொடங்க வேண்டியதுள்ளது.

அன்றைய சூழலும் இன்றைய நிலைமையும் வெவ்வேறு என்றாலும் சிறந்த திட்டமிடலே எம்மை வெற்றி இலக்கை நோக்கி கொண்டுச் செல்லும்.

எனவே கட்சியின் வெற்றி இலக்கை நோக்கிய திட்டத்தை தயாரிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள். சாகல ரத்நாயக மற்றும் அனோமா கமகே ஆகியோர் இதற்கு தலைமைத்தாங்கி ஆலோசனைகள் பெற்று திட்டத்தை வரைவார்கள்.

மிக குறுகிய காலத்தில் தற்போதைய அரசாங்கம் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளது. எதிர்க்கட்சியும் அதே நிலையில் தான் உள்ளது.

ஹரின் மற்றும் ரஞ்சன் ஆகியோரை ஐக்கிய தேசிய கட்சி தனிமைப்படுத்தி விடக் கூடாது . அவர்களுக்கு ஏற்படக்கூடிய அநீதிகளின் போது நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும். தேவைப்படின் நீதிமன்றத்தின் ஊடாகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

Related Articles

Latest Articles