டயகம நகரில் மூன்றாவதாக உருவாகவுள்ள மதுபானசாலையின் பின்னணி என்ன?

2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி நுவரெலியா மாவட்டத்தில் மது வரி உரிமம் பெற்ற 234 மதுபானசாலைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் நகரப்பிரதேசங்களை விட தோட்டப்பகுதிகளை அண்டியதாகவும் தோட்டங்களுக்கு மிக நெருக்கமாக உள்ள சிறு நகரங்களிலுமே அதிக மதுபானசாலைகள் காணப்படுகின்றன. பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தமது வருமானத்தின் 40 வீதத்தை மதுபானத்துக்காக செலவழிக்கின்றனர் என 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது.

அதே வேளை அரசாங்கத்தின் உதவியுடன் இயங்கும் சுமித்ரயோ என்ற தொண்டு நிறுவனத்தின் தகவல்களின் படி, பெருந்தோட்டப்பகுதி வாழ் சிறுவர்களில் பத்தில் ஒருவர், மதுபாவனை காரணமாக ஏற்படும் வறுமையினால் தனது பாடசாலை கல்வியை இடைவிட்டவர்களாக உள்ளனர்.

ஆனால் இது குறித்து எந்த பிரக்ஞைகளும் மலையக அரசியல் பிரதிநிதிகளுக்கு இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை. கடந்த காலங்களில் இவர்களின் ஆசிர்வாதங்களினூடாகவே நுவரெலியா மாவட்டத்தில் மதுபானசாலை அனுமதிபத்திரங்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டன.

சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் எல்லா மாவட்டங்களிலும் உள்ள அனைத்து எம்.பிக்களுக்கும் அவர்களின் உதவியாளர்களுக்கும் கோட்டா முறையில் மதுபான அனுமதி பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டமையை அனைவரும் அறிந்திருப்பர். அதை கொள்ளை விலையில் அவர்கள் வேறு நபர்களுக்கு விற்றனர். இப்போதும் மலையக சிறு நகரங்களில் புதிது புதிதாக மதுபானசாலைகள் உருவாகிக்கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில் தலவாக்கலை பிரதேச செயலகம் மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபையின் கீழ் வரும் டயகம பிரதேசத்தில் புதிதாக ஒரு மதுபானசாலை உருவாவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். கிட்டத்தட்ட 50 வர்த்தக நிலையங்களே உள்ள டயகம நகரில் இரண்டு மதுபானசாலைகள் உள்ளன. தற்போது உருவாகவுள்ள மதுபானசாலையானது நகரத்துக்கு உட்பிரவேசிக்கும் இடத்தில் அமையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இவ்விடம் டயகம இரண்டாம் டிவிஷன் தோட்டப்பிரிவுக்குட்பட்டது என்று தெரிவித்துள்ள பிரதேச இளைஞர்கள், இந்த இடத்தில் மதுபானசாலையை அமைக்க தோட்ட நிர்வாகம் எவ்வாறு இடம் கொடுத்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

தலவாக்கலை பிரதேச செயலகத்திலிருந்து NE/TK/01/02/04 என்ற இலக்கமிடப்பட்ட கடிதத்தின் ஊடாக இல 50 D/ டயகம வீதி டயகம எனும் இடத்தில் மதுபானசாலை ஒன்றை அமைப்பது தொடர்பில் கடிதம் ஒன்று 475/L பிரிவு கிராம அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மக்களின் எதிர்ப்பு மேலதிகமாக இவ்விடயத்தில் அமையவுள்ள மதுபானசாலை கட்டிடத்தின் உரிமையாளர் உள்ளூராட்சி சபை ஒன்றின் உத்தியோகத்தர் என தெரிவிக்கும் பிரதேச மக்கள், புதிய மதுபானசாலை தொடர்பில் ஆட்சேபனைகள் எதுவும் இருந்தால் மக்கள் தெரிவிக்கலாம் என குறித்த பிரிவின் கிராம அதிகாரியால் கட்டிடத்தில் அறிவித்தல் ஒன்று ஒட்டப்பட்டு ஒரே இரவில் அது அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் குறித்த பிரதேசத்தின் தோட்டத் தலைவர்களுக்கும் இவ்வாறான அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நாம் நுவரெலியா மற்றும் அட்டன் (கொமர்ஷல்) கலால் திணைக்கள அலுவலகங்கள் , அக்கரபத்தனை பிரதேச சபை செயலாளர், டயகம 475/L பிரிவின் கிராம அதிகாரி ஆகியோருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் தெரிவித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

நுவரெலியா கலால் திணைக்களம் காரியாலயம் (பொறுப்பதிகாரி)
குறித்த பிரதேசத்திலிருந்து மதுபானசாலை அமைப்பதற்கான விண்ணப்பப்படிவம் கிடைத்துள்ள அதே வேளை டயகம மேற்கு தோட்டப்பிரிவின் மக்கள் கையெழுத்திட்ட ஆட்சேபனை கடிதமும் எமக்குக் கிடைத்துள்ளது. இதை நாம் கண்டி காரியாலயத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும் குறித்த பகுதிக்கு மதுபான அனுமதியை வழங்கும் அதிகாரம் அலுவலகம் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள காரியாலயத்துக்குரியது என பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கொமர்ஷல் கலால் திணைக்கள காரியாலயம் (பொறுப்பதிகாரி)

டயகம மட்டும் என்றில்லை. எமது காரியாலத்தின் அதிகாரத்தில் வரும் பிரதேசங்களிலிருந்து சுமார் பத்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மதுபானசாலை அனுமதிபத்திரத்தை விநியோகிக்கும் அதிகாரம் மாத்திரமே எமக்குள்ளது. இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பிரதேச செயலகத்திற்கே உள்ளது. எவ்விடத்தில் மதுபானசாலை அமையப்போகின்றதோ அவ்விடத்தில் வாழ்ந்து வரும் மக்கள், கிராம அதிகாரி, ஆன்மிக நிறுவனங்கள், பொலிஸ் நிலையங்களின் கருத்துக்கள் பெறப்பட்டே பிரதேச செயலகத்தால் இறுதி முடிவு எடுக்கப்படும். கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை நாம் உரிய தரப்பினரிடம் அனுப்பி வைத்தல் என்பது அனுமதி பத்திரம் விநியோகிக்கப்பட்டு விட்டது என்ற அர்த்தமல்ல.

செயலாளர் –அக்கரபத்தனை பிரதேச சபை

பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக ஆரம்பிக்கப்படும் வர்த்தக செயற்பாட்டுக்கான வர்த்தக உரிமத்தை மாத்திரமே (Trade License) நாம் விநியோகிப்போம். வர்த்தகத்தின் தன்மை என்ன என்பது குறித்த அனுமதிபத்திரத்தை அவர்கள் பெற வேண்டும். அதன் படி மதுபானசாலை ஒன்றை கொண்டு நடத்துவதற்கான வர்த்தக உரிமம் கோரப்பட்டு இதுவரை எமக்கு விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை.

கிராம அதிகாரி டயகம 475/L பிரிவு

மதுபானசாலை ஒன்று குறித்த இடத்தில் ஆரம்பிக்கப்படப் போகின்றது என்ற விடயத்தை அறிவிப்பது எனது பணிகளில் ஒன்று. பிரதேச செயலகத்தின் உத்தரவுகளின் படியே கிராம அதிகாரிகள் செயற்பட வேண்டும். அதன் படியே நான் அறிவித்தேன். அதற்கு அப்பால் மேலதிக தகவல்களை என்னால் வழங்குவதற்கு அனுமதியில்லை. ஆட்சேபனைகள் வருமிடத்து அது குறித்த முடிவுகளை உரிய தரப்பினரே எடுக்க வேண்டும்.
தொழிலாளர் குடியிருப்புகள்
புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மதுபானசாலை கட்டிடத்தின் அருகில் இரண்டு தொழிலாளர் குடியிருப்புகள் உள்ளன. அங்கு பாடசாலை செல்லும் சிறுவர்களும் இருக்கின்றனர். இவர்களின் கல்வி நடவடிக்கைகளை இது பாதிக்குமா என்பதையும் தொழிலாளர்களுக்கு வாழ்வியலில் இது எந்தளவு தாக்கத்தை செலுத்தப் போகின்றது என்பது குறித்த தகவல்களை தலவாக்கலை பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டதா என்பது முக்கிய விடயம். டயகம பிரதேசமானது பல தோட்டப்பிரிவுகளை கொண்டது. டயகம வெஸ்ட் எனப்படும் தோட்டம் ஆறு பிரிவுகளைக் கொண்டது. டயகம ஈஸ்ட் மூன்று பிரிவுகளைக் கொண்டது. டயகமவுக்கு அருகாமையில் மேகமலை, ஆணைத்தோட்டம், சந்திரிகாமம் மற்றும் ஆடலி, காளமலை போன்ற தோட்டங்கள் உள்ளன. குறித்த மதுபானசாலை ஆரம்பிக்கப்படவுள்ள கட்டிடம் அமைந்துள்ள காணியானது டயகம இரண்டாம் டிவிஷன் தோட்டத்துக்குரியதா என்பதை தோட்ட நிர்வாகம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு அது தோட்ட நிர்வாகத்துக்குரியதாக இருந்தால் இதில் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வர்த்தக உரிமத்தை வழங்குவதற்கு அக்கரபத்தனை பிரதேச சபைக்கு அதிகாரங்கள் இருக்கின்றனவா என்பதும் ஒரு முக்கிய கேள்வியாகும். இதே வேளை சமூக அக்கறையுடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புகள் சில இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
பிரதேச இளைஞர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் கடிதம் ஒன்றை கையொப்பங்கள் சேகரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதே வேளை இந்த மதுபானசாலை அனுமதி உரித்து யாரின் பெயரில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல்களும் பிரதேச மக்களுக்கு தெரியவில்லை.
பிரதிநிதிகள் என்ன செய்கின்றனர்?

டயகம பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மதுபானசாலையானது, மதுபான பிரியர்கள் அமர்ந்து மது அருந்தும் வகையில் உருவாகவுள்ளதாகவே கூறப்படுகின்றது. கிராம அதிகாரி உத்தியோகபூர்வமாக அறிவித்தல் விடும் நிலைமை ஏற்படும் வரை தமக்கு ஒன்றுமே தெரியாது என பிரதேச அரசியல் பிரமுகர்களும் அவர்கள் சார்ந்த கட்சித்தலைவர்கள் மெளனம் சாதிப்பதில் அர்த்தமில்லை. இன்று நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளை விட மதுபானசாலைகள் அதிகரித்துச் செல்கின்றன.

இது குறித்து பிரதேச இளைஞர் ஒருவர் பிரதிநிதி ஒருவரிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் ‘ முதலில் மக்கள் கத்துவார்கள் பிறகு அதை மறந்து விடுவார்கள்’ என அலட்சியமாக பதில் கூறியுள்ளார். இவ்விடத்தில் 2019 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர்க காங்கிரஸானது பொது ஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவதற்காக செய்து கொள்ளப்பட்ட தேர்தல் கால புரிந்துணர்வு ஒப்பந்தம் ஞாபகம் வருகின்றது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள 32 அம்சங்களில் பிரதானமானது தோட்டப்பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை தடை செய்தல், கட்டுப்படுத்தல் என்பதாகும். இது குறித்த செய்தி 2019/10/19 ஆம் திகதி சிலோன் டுடே பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. (குறித்த செய்தி பற்றிய தகவல் இப்பக்கம் பிரசுரிக்கப்பட்டுள்ளது) அப்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இப்போது செல்லுபடியாகுமா என்ற கேள்வி பலருக்கு எழக்கூடும். ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது முதல் தடவையாக நுவரெலியா மாவட்டத்தில் மதுபானசாலைகளை குறைப்பது தொடர்பில் தனது கருத்தை வெளியிட்டிருந்தது.

ஆகவே இ.தொ.காவின் தற்போதைய தலைவர் செந்தில் தொண்டமானும் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் இதை சீர்தூக்கி பார்க்க வேண்டியவர்களாக உள்ளனர். ஏனென்றால் அமரர் ஆறுமுகனின் கொள்கைகளையும் வழித்தடங்களையுமே இ.தொ.கா பின்பற்றும் என அக்கட்சியின் அனைத்து பிரமுகர்களும் கூறி வருகின்றனர். அக்கரபத்தனை பிரதேச சபையின் நிர்வாகம் இ.தொ.கா வசம் இருந்தமை முக்கிய விடயம். குறித்த நிர்வாக காலத்தில் இப்படியொரு சம்பவம் இடம்பெறவில்லை. அப்படியானால் தற்போது பிரதேச சபைகள் கலைக்கப்பட்டவுடன் அரசாங்கம் திட்டமிட்டு பெருந்தோட்டப்பகுதிகளில் மதுபானசாலைகளைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றதா? இதை அரசாங்க தரப்பிலிருக்கும் இ.தொ.கா கண்டு கொள்ளவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆகவே புதிய மதுபானசாலைகள் மலையக பிரதேசங்களில் உருவாவதை அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் இ.தொ.கா மாத்திரமல்லாது தமிழ் முற்போக்குக் கூட்டணியில் உள்ள மலையகக் கட்சிகளும் வரவேற்கின்றனவா என்ற சந்தேகம் இப்போது பிரதேச மக்கள் மத்தியில் உருவாகி வருகின்றன. அனைத்து மலையக கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் இதற்குப் பொறுப்பு கூற வேண்டியவர்களாக உள்ளனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 

கட்டுரையாளர் – சிவலிங்கம் சிவகுமார்
நன்றி – வீரகேசரி

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles