டிசம்பர் 24, 25, 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, மேற்படி நான்கு நாட்களில் தடையற்ற மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை உறுதி செய்யும் என தெரிவித்தார்.
இதேவேளை, ஜனவரி மாதம் தினமும் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையில் அங்கம் வகிக்கும் சில தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கூற்றுக்கள் அடிப்படையற்றவை என அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டிசெம்பர் 31ஆம் திகதி நிலக்கரி கையிருப்பு குறைவடையும் போது நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் இயங்குவதை நிறுத்தியதன் பின்னர் நாட்டில் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன நேற்று தெரிவித்தார்.










