டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த 1,600 சிறு விவசாயிகளின் மரக்கறி பயிர்ச்செய்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் இன்று (27) வெளியிடப்பட்ட அறிக்கையில், 12 மாதங்களைக் கொண்ட இத்திட்டத்தின் ஊடாக உள்ளூர் விதை உற்பத்தி முறைகளை மீளமைத்தல், தரமான நடுகைப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் காலநிலைக்கு ஏற்ற விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவை நோக்கமாகக் கொண்டுள்ளதாக FAO தெரிவித்துள்ளது.
விவசாயத் திணைக்களம் மற்றும் மாகாண விவசாயத் திணைக்களங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கு, ஆஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் ஊடாக நிதியுதவி வழங்கப்படுகிறது.
டித்வா புயலினால் இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் மரக்கறிப் பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், விவசாய நிலங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரங்களும் சேதமடைந்தன.
இத்திட்டத்தின் கீழ், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 800 பீன்ஸ் விதை உற்பத்தி விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன. இவர்கள் அறிவுப் பரிமாற்றம், கூட்டுச் செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகளை இலகுபடுத்தும் வகையில் 40 விவசாயக் குழுக்களாக ஒழுங்கமைக்கப்படவுள்ளனர்.
முதற்கட்டமாக, மத்துரட்டைப் பகுதியைச் சேர்ந்த 280 பீன்ஸ் விதை உற்பத்தியாளர்களுக்கு சான்றளிக்கப்பட்ட பீன்ஸ் விதைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், தரமான விதை உற்பத்தி மற்றும் தேசிய விதைச் சான்றளிப்பு நடைமுறைகள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2026 டிசம்பரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் வெளிப்புற விதை விநியோகஸ்தர்களில் விவசாயிகள் தங்கியிருப்பதைக் குறைத்து, உள்ளூர் விதைச் சந்தைகளில் அவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையை மீள ஆரம்பிப்பதற்காக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 800 விவசாயிகளுக்கும் உதவிகள் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 400 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் 2,500 தரமான உருளைக்கிழங்கு விதைக் கிழங்குகள் வழங்கப்படவுள்ளன.
இந்த உதவித் திட்டத்தின் முதற்கட்டம் 2026 ஆகஸ்ட் மாதம் நுவரெலியா ராகலைப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, 38 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அடுத்தகட்ட விதைக் கிழங்கு விநியோகம் நவம்பர் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும், பயிர் விளைச்சல் மற்றும் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துவதற்காக விவசாய உள்ளீடுகள், பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றன.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில் மரக்கறி உற்பத்திக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என FAO தெரிவித்துள்ளது.
