கம்பளை, புப்புரஸ்ஸ போமண்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் அட்டபாகே ஓயா ஆற்றின் குறுக்கே பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் பெரும் போக்குவரத்து நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
குறித்த பாலம் சேதமடைந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், இதுவரை புனரமைக்கப்படாததால் புப்புரஸ்ஸ தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் தினமும் சுமார் 26 கிலோமீற்றர் தூரம் பயணித்து பாடசாலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, பாடசாலை மாணவர்களும் ஆற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள மரக்குற்றி ஒன்றின் மீது ஏறி, ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து பாடசாலைக்குச் சென்று வருகின்றனர்.
சுமார் 120 அடி அகலமுடைய அட்டபாகே ஓயா ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், வாகனப் போக்குவரத்தும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 360 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமது போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வாகப் பாலத்தை மீண்டும் நிர்மாணித்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உடபளாத்த பிரதேச சபை உறுப்பினர் தேவராஜ் நவநீதராஜா, உடபளாத்த பிரதேச சபை அமர்வின்போது இந்த ஆபத்தான பாலம் குறித்து பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.
