இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின்போது தந்தை ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப்தேவ் பிரதேசத்திலுள்ள பட்டியார் பூதர் கிராமத்தைச் சேர்ந்த 51 வயதான சங்கர்லால் மேக்வால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த நவம்பர் 20ஆம் திகதி தனது மகள் பிரியங்காவின் திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து சங்கர்லால் மகிழ்ச்சியாக நடனமாடியுள்ளார்.
இதன்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, குடும்பத்தினர் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் உதய்ப்பூரிலுள்ள எம்.பி. வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
மகளின் திருமணச் சடங்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தந்தையின் மரணச் செய்தியை மகளுக்கும் மனைவிக்கும் தெரிவிக்க குடும்பத்தினர் முடிவெடுக்கவில்லை.
தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மறுநாள் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மகளுக்கும் தாயாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சங்கர்லாலின் உடல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில், மணமகன் வீட்டாருக்கும் சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு குடும்பத்தினரின் இணக்கத்துடன் திருமணச் சடங்குகள் எளிமையான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நவம்பர் 21ஆம் திகதி அதிகாலை சுமார் 3 மணியளவில் திருமணச் சடங்குகள் நிறைவடைந்ததுடன், மகளின் வழியனுப்பு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
மகள் தனது புகுந்த வீட்டைச் சென்றடைந்த பின்னரே, தந்தை உயிரிழந்த செய்தி அவருக்குத் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சங்கர்லாலின் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றுள்ளன.
மகளின் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த தந்தை, திருமண நாளிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










