கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பஸ் நடத்துனர் கைது

காலியிலிருந்து தெஹியத்தகண்டிய நோக்கிப் பயணிக்கும் பேருந்தின் நடத்துநர் ஒருவர், 23 பொதிகளில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறிபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா அடங்கிய ஒரு பொதியும், தலா 5 கிராம் கஞ்சா அடங்கிய 22 சிறிய பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கடந்த திங்கட்கிழமை (23) தெஹியத்தகண்டிய பதில் நீதவான் உதாரி சமந்திக முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவரிடமிருந்து கஞ்சாவைக் கொள்வனவு செய்து, அதனை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஐந்து பொதிகளைக் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு முறையும் மேலதிகமாக ஒரு பொதியை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சந்தேகநபர் கஞ்சாவைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு பொதியையும் 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்ததுடன், இலவசமாகக் கிடைத்த பொதிகளையும் விற்பனை செய்து மேலதிக வருமானம் ஈட்டி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காலியிலிருந்து தெஹியத்தகண்டிய வரையிலான பேருந்துப் பயணத்தை நிறைவு செய்து, பேருந்தை பணிமனையில் ஒப்படைத்த பின்னர், சந்தேகநபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னர் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவினர் குறித்த பேருந்தை இரகசியமாகக் கண்காணித்து வந்துள்ளனர்.
பேருந்து தெஹியத்தகண்டிய பணிமனையை வந்தடைந்த பின்னர், அங்கிருந்து வெளியேறி கஞ்சாவை விற்பனை செய்யத் தயாரான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
…………………..
கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு விடுத்த கோரிக்கையை, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கோரி கோட்டாபய ராஜபக்ச இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், அவர் மீது இந்த வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணைகளின் போது, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்; இருப்பினும், அந்தச் சமயத்தில் அவர் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருக்கவில்லை.
இந்த விண்ணப்பம் மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியபோது, கோட்டாபய ராஜபக்ச கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்பாக முன்னிலையாகியிருந்தார்.
அதேவேளை,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி, கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை, உயர்நீதிமன்றம் அடுத்த ஆண்டு மார்ச் 5ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.
…………..
தோட்டப்புற மக்களிடையே அதிகரிக்கும் வறுமை; 23 சதவீதமாகப் பதிவு

இலங்கைக் குடும்பங்களின் மாதாந்த சராசரி வருமானம் அதிகரித்துள்ள போதிலும், பணவீக்கத்தின் தாக்கத்தால் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்யும் திறன் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் புதிய அரசாங்கப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் திருத்தப்பட்ட குடும்ப வருமானம் மற்றும் செலவின ஆய்வின்படி, 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் பணவீக்கத்துக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட கொள்வனவு சக்தி 39.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
குடும்பங்களின் மாதாந்த சராசரி வருமானம் 2019ஆம் ஆண்டு 76,414 ரூபாவாக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 120,266 ரூபாவாக அதிகரித்துள்ளது. எனினும், பணவீக்கத்தைக் கணக்கில் கொண்ட பின்னர் அதன் உண்மையான பெறுமதி 32.8 சதவீதத்தால் குறைந்துள்ளது.
அதேவேளை, குடும்பங்களின் சராசரி மாதாந்த செலவினம் 2019ஆம் ஆண்டு 63,130 ரூபாவிலிருந்து 2025ஆம் ஆண்டில் 116,191 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஆனால், பணவீக்கத்துக்கு ஏற்ப சரிசெய்தபோது உண்மையான செலவினம் 21.4 சதவீதத்தால் குறைந்துள்ளது.
இதேவேளை, நாட்டின் வறுமை நிலையும் அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு 14.3 சதவீதமாக இருந்த தேசிய வறுமை வீதம், 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 16 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்படி, சுமார் 34 இலட்சத்து 20 ஆயிரம் பேர் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கான மாதாந்த வறுமைக் கோடு 2019ஆம் ஆண்டு 6,966 ரூபாவாக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் 16,417 ரூபாவாக அதிகரித்துள்ளது.
வருமான ஏற்றத்தாழ்வுகளும் கணிசமாகக் காணப்படுகின்றன. செல்வந்த குடும்பங்களில் முதல் 20 சதவீதத்தினரின் சராசரி மாதாந்த வருமானம் 335,679 ரூபாவாக உள்ள நிலையில், குறைந்த வருமானம் கொண்ட 20 சதவீதத்தினரின் வருமானம் 22,612 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
குடியிருப்புப் பிரிவுகளின் அடிப்படையில், நகர்ப்புறக் குடும்பங்களின் சராசரி மாதாந்த வருமானம் 178,455 ரூபாவாகவும், கிராமப்புறக் குடும்பங்களின் வருமானம் 110,613 ரூபாவாகவும், தோட்டப்புறக் குடும்பங்களின் வருமானம் 72,558 ரூபாவாகவும் காணப்படுகிறது.
குறிப்பாக, தோட்டப்புற மக்களிடையே வறுமை வீதம் 23 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இது கிராமப்புறங்களில் 17.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 7.8 சதவீதமாகவும் காணப்படுகிறது.
2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதலாவது குடும்ப வருமானம் மற்றும் செலவின ஆய்வின் ஆரம்பகட்ட முடிவுகளே தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளிவிபரங்கள், முழுமையான தரவுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் இறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
…………
குற்றத்தை ஒப்புக்கொண்ட டயானா: ஜனவரி 17ஆம் திகதி தீர்ப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில், செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பான குற்றச்சாட்டையே அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவருக்கான தண்டனை அறிவிப்பை ஜனவரி 17ஆம் திகதி வெளியிடுவதற்கு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) டயானா கமகேவுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
செல்லுபடியாகும் விசா இன்றி வெவ்வேறு காலப்பகுதிகளில் இலங்கையில் தங்கியிருந்தமை மற்றும் இலங்கை கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு தவறான தகவல்களை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்குகின்றன.
கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபரில் வழக்கு விசாரணைகள் ஆரம்பமானபோது, டயானா கமகே குற்றச்சாட்டுகளை நிராகரித்து குற்றமற்றவர் எனத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, செல்லுபடியாகும் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லாத காரணத்தால் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்து, 2024ஆம் ஆண்டு மே 8ஆம் திகதி உயர் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருந்தது.
பிரித்தானியப் பிரஜையான டயானா கமகே, அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் பதவியையும் இழந்தார்.
……….
கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேருக்கு பிணை!

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரையும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
…………
இடி, மின்னல், பலத்த காற்று; 18 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை

நாட்டின் 18 மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையை Amber warning விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (26) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சில பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அநுராதபுரம், பதுளை, காலி, மன்னார், மாத்தறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இதனால் பாதிக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மரங்கள் முறிந்து விழுதல், வீடுகளுக்குச் சேதம் ஏற்படுதல், திடீர் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளில் தடங்கல், பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்குப் பாதிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் நிகழக்கூடும் எனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், வீதி, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகளும் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நெருங்கும்போது வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது கூரையுடன் கூடிய வாகனங்களுக்குள் தஞ்சமடையுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மரங்களின் கீழ் அல்லது திறந்தவெளி அமைப்புகளின் கீழ் தஞ்சமடைவதைத் தவிர்க்குமாறும், திறந்தவெளிகள், கடற்கரைகள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளிலிருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதையும், மரங்கள் நிறைந்த வீதிகள் மற்றும் வெள்ளநீர் தேங்கியுள்ள பாதைகளில் பயணிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அது தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளைப் பின்பற்றுவதுடன், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டால் அதற்குத் தயாராக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மற்றும் சிறிய படகுகளைப் பயன்படுத்துவோர் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், ஏற்கனவே கடலில் இருப்பவர்கள் விரைவாக கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
………..
தீவுக்கு வந்தது எரிபொருள்; நெடுந்தீவில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் தயார்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இதுவரை நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில், அங்கு வாழும் மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருளைக் கொண்டுசெல்லும் பணிகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இரண்டு எரிபொருள் பவுஸர்களில் ஏற்றப்பட்ட எரிபொருள், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இறங்குதுறையிலிருந்து கடல் வழியாகக் பாரிய படகு மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
அங்கு கொண்டுசெல்லப்பட்ட எரிபொருள், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நெடுந்தீவு மக்களுக்கான எரிபொருள் விநியோகத்தை இலகுபடுத்துவதற்கான முக்கியமானதொரு கட்டம் எட்டப்பட்டுள்ளது.
நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட சிரமம் இருந்து வந்தது. இதற்காகத் தீவிலிருந்து குறிகட்டுவான் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டதுடன், போக்குவரத்துச் செலவு, நேர விரயம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களையும் மக்கள் எதிர்கொண்டனர்.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நெடுந்தீவின் அபிவிருத்தி மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அங்கு முதன்முறையாக நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி நிகழ்வின்போது, நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருந்தது. தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தற்போது எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டு வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளமை, நெடுந்தீவு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நனவாக்கும் முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது.
குறிப்பாக, மீனவர்கள், விவசாயிகள், போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவோர், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அவசர மருத்துவத் தேவைகள், கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் தீவின் சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கும் இது துணைபுரியும்.
தீவுப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் மற்றுமொரு அடையாளமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
………………










