ஓமானில் பெய்த கனமழைக்கு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் புயலுடன் கூடிய கனமழை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டுபாயை பொருத்த வரையில் 12 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது துபாயில் ஓராண்டு பெய்யக்கூடிய சராசரி மழை அளவு என்றும் கடந்த 75 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிலான கனமழை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமான சேவை முடங்கியுள்ளது. 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து மற்றும் வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போதைய பெருமழைக்கு ஐக்கியஅரபு அமீரகம் செயற்கை மழைக்காக மேக விதைப்பு காரணமாக இருக்கக்கூடும் என்ற சில தரப்புகள் கூறிவருகின்றன. இது செயற்கையாக தூண்டப்பட்ட மழை அல்ல என்றும் காலநிலை மாற்றத்தின் நீட்சியாக கனமழை பெய்துள்ளது என்றும் கூறுகின்றனர்.