“அமெரிக்க துரோகத்தின் பாடங்களை கனடா மக்கள் ஒருபோதும் மறக்க கூடாது.” – என்று தேர்தல் வெற்றிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
கனடாவை ஆதரிக்கவும் அதனை வலுவாகக் கட்டியெழுப்பவும் மக்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள் என்பதையே தேர்தல் முடிவு வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வரவிருக்கும் நாட்களும் மாதங்களும் சவாலானதாக இருக்கும். அவை சில தியாகங்களை கோரும். ஆனால் எங்கள் தொழிலாளர்களையும் எங்கள் வணிகங்களையும் ஆதரிப்பதன் மூலம் அந்த தியாகங்களைப் பகிர்ந்து கொள்வோம் – எனவும் பிரதமர் அறைகூவல் விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா அமெரிக்காவின் மற்றொரு மாகாணமாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவை கவர்னர் என ட்ரம்ப் அழைத்தார். கனடாவில் லிபரல் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியில் இருந்து விலகி மார்க் கார்னியை பிரதமராக்கினார்.
தொழிலதிபரும் வங்கியாளருமான மார்க் கார்னி, இந்த தேர்தலில் ட்ரம்ப் விடுத்த இணைப்பு கோரிக்கைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார்.
கனடாவில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ட்ரம்ப் கூறியது நிஜமாகும் என்றும் அவர் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையிலேயே தேர்தல் வெற்றியின் பின்னர், ட்ரம்பின் அணுகுமுறையை அவர் விமர்சித்துள்ளார்.