அமெரிக்காமீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்கின்றது என சீனா விமர்சித்துள்ளது.
இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை. இறுதிவரை போராடுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்புகளையடுத்து, அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்தது.
இதனையடுத்து அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் தான், சீன அரசு இதழான க்ளோபல் டைம்ஸ் இதழில் வெளியான அறிக்கையில், “பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு பொருளாதார மிரட்டல் விடுத்துள்ளது. தனது அதிகாரத்தை அமெரிக்கா துஷ்பிரயோகம் செய்கிறது.
அமெரிக்காவின் நடவடிக்கைகள் சர்வதேச பொருளாதார விதிமுறைகளுக்கு எதிரானது. இது உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை சேதப்படுத்தும். சீனா நியாயத்தையும், தனது இறையான்மையையும் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு சீனா அடிபணியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.