தகவல் கிடைத்திருந்தால் 21/4 தாக்குதலை தடுத்திருப்பேன் – மைத்திரி

21/4 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் எனக்கு எதிராக “கோயபெல்ஸ்” யுக்தி கையாளப்பட்டு, மக்கள் மத்தியில் தவறான கருத்து விதைக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் தொடர்பில் நான் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை. புலனாய்வு தகவல்கள் எனக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தால் பேரவலம் ஏற்பட இடமளித்திருக்கமாட்டேன் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது நாளாக நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“21/4 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் எனது அஞ்சலியையும், கவலையையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டியல் அன்று இன்றும் நான் உறுதியாக இருக்கின்றேன். இதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

இவ்விவாதத்தில் நான் உரையாற்றக் கூடாது என ஒரு சிலரும், இல்லை…. உரையாற்றியே ஆகவேண்டும் என மேலும் சிலரும் கருத்துகளை முன்வைத்தனர். இருதரப்பினரதும் கருத்துகள் என்னவாக இருந்தாலும் எனது மனசாட்சியின் பிரகாரம் சில விடயங்களை குறிப்பிட்டாக வேண்டும்.

21/4 தாக்குதலை மையப்படுத்தி மக்கள் மத்தியில் நான் தொடர்பில் எவ்வாறான கருத்து பரப்பட்டுள்ளது, விதைக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியும். குறிப்பாக எனது அமைச்சரவையில் இருந்த, என்னால் நியமிக்கப்பட்ட அமைச்சரொருவர் தாக்குதல் நடைபெற்று மறுநாளே அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போது இத்தாக்குதல் குறித்து ஜனாதபதி (மைத்திரிபால சிறிசேன) முன்கூட்டியே தகவல் அறிந்திருந்தார் எனவும், இதற்கு அவர் முழுமையாக பொறுப்புக்கூறவேண்டும் எனவும் அந்த அமைச்சர் அறிவிப்பு விடுத்தார். அதேபோல எனது அரசில் இருந்த மேலும் சில அமைச்சர்களும் தாக்குதல் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே அறிந்திருந்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கருத்தை மக்கள் மயப்படுத்தினர்.

இதனால் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் தெரிந்தும், தடுத்து நிறுத்த நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் தெரிவிப்பதன்மூலம் அதனை உண்மையாக்கலாம் என்பதே கோயபெல்ஸின் யுக்தியாகும். எனவே, 21/4 தாக்குதல் சம்பந்தமாகவும் அதே யுக்தி கையாளப்பட்டுதான் மக்கள் மத்தியில் எனக்கு எதிராக கருத்து பரப்பட்டுள்ளது. தவறான முறையிலும், தெளிவு இன்மையாலும், அரசியல் பகைமையாலுமே என்னை இலக்கு வைத்து கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.

எனது அமைச்சரவையில் ஒரு தரப்பே எனக்கு ஆதரவு வழங்கியது. பெரும்பான்மை ஒத்துழைப்பு வழங்கவில்லை. கொள்கையுடன் இணைந்து பயணிக்ககூடிய பிரதமரும் இருக்கவில்லை. இவ்வாறு பல தடைகள், நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் நாட்டை நிர்வகித்தேன். நாட்டுக்கு பாதகமான விடயங்களை தடுத்து நிறுத்தினேன். எம்.சி.சி. ,சிங்கப்பூர் போன்ற உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு அனுமதி வழங்கவில்லை.

போர்காலத்தில் நான் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துள்ளேன். சந்திரிக்கா அம்மையார் ஆட்சியிலும் பாதுகாப்பு சபை சென்றுள்ளேன். எனவே, எனக்கு பாதுகாப்பு சபை என்பது புதிய விடயமல்ல. 2015 – 16 முதலே ஐ.எஸ். அமைப்பு குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தேன். ச’;ரான் கைது செய்யப்படாமை தொடர்பிலும் வினா எழுப்பியுள்ளேன்.

அதேவேளை, 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அரச புலனாய்வு பிரிதான பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவர்களுக்கிடையில் கடிதம் பறிமாற்றல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இது தொடர்பில் எனக்கு எவரும் தெரியப்படுத்தவில்லை. தெரியப்படுத்தினோம் என எவரும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமும் வழங்கவில்லை.

தாக்குதல் தொடர்பில் எனக்கு முன்கூட்டியே அறிவித்திருந்தால், நடவடிக்கை எடுக்காமல் வெளிநாடு செல்லும் அளவுக்கு நான் மிலேச்சத்தனமான மனிதன் கிடையாது. பேராயருடன் கலந்துரையாடி, கொழும்புக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பேன். ” – என்றார்.
………………

யார் இந்த கோயபெல்ஸ்?
ஹிட்லரின் கொள்கைப்பரப்பாளராக செயற்பட்டவர்தான் கோயபெல்ஸ் (Goebbels) .
எந்தவொரு பொய்யையும் நயமாகச்சொல்லி, மக்களின் மனங்களை மாற்றி நம்பவைக்கும் வித்தை அறிந்தவர். அதாவது, ஒரு கருத்தியலை,மெல்லமெல்ல மக்களிடம் திணித்து – அதை, பொதுக் கருத்தாக்கி – அந்தக் கருத்தைச் சுற்றியே மக்களை உரையாடவைக்கும் பெரும் தந்திரக்காரர்.

Related Articles

Latest Articles