மிரிஹான பொலிஸ் பிரிவில், நேற்று (18) மாலை தனது உடலுக்கு தீ வைத்து, மனைவியையும் கட்டிப்பிடித்து எரிக்க முயன்ற நபரின் முயற்சியை பொலிஸ் அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
குறித்த நபர் தனது மனைவிக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்த வந்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரிஹான தலைமையகப் பொலிஸாரின் முறைப்பாடு பிரிவில் சந்தேக நபர் லைட்டரை பற்றவைத்து தனது உடலுக்கு தீ மூட்டி அருகில் இருந்த மனைவியை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார்.
அதேநேரம், அங்கிருந்த பொலிஸார் அந்த பெண்ணை துரத்திச் சென்ற நபரைப் பிடித்து தீயை அணைத்தனர்.
அப்போது அவர் அணிந்திருந்த ஆடையில் பெட்ரோல் வாசனை வீசியது.
தீக்காயங்களுக்கு உள்ளான நபரை களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனைவி மீது ஆசிட் வீசிய குற்றத்திற்காக அந்த நபருக்கு எதிராக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும், சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்ததாக மூன்று உயர்நீதிமன்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
34 வயதான அவர், உடஹமுல்ல, நுகேகொட புகையிரத நிலைய வீதியில் வசிப்பவராவார்.
இது தொடர்பான விசாரணைகள் மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் பேரில் நடைபெற்று வருகின்றன.










