எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புகளும் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி அதன் ஒற்றுமையை சிதற விடாமல் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளன. 2015 இல் உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த 10 ஆண்டுகளாக அசைக்க முடியாத கூட்டணியாக இருந்து வருவதோடு இதுவரை, மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள், மூன்று பாராளுமன்றத் தேர்தல்கள், ஒரு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சந்தித்து வந்துள்ளதோடு, இரண்டாவது முறையாகவும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாரக உள்ளது.
கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் தேசியக் கட்சிகள் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்தன. அதில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்சிகளுக்கும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பாராளுமன்றத்தில் அவர்கள் குரல்கொடுத்து வருகின்றார்கள்.
அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பு, நுவரெலியா, பதுளை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் சில இடங்களில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னதிலும், சில இடங்களில் ஜனநாயக மக்கள் முன்னணியின் “ஏணி” சின்னத்திலும், சில இடங்களில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் “அரிவாள்” சின்னதிலும், தனித்துப் போட்டியிடவுள்ளதோடு, சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் “டெலிபோன்” சின்னத்தில் இணைந்தும் போட்டியிடவுள்ளன. அதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், தேர்தலுக்குப் பிறகு, ஏனைய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பான புரிந்துணர்வு பேச்சுவார்தைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்து முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு வட்டாரத்திலும் மக்களோடு மக்களாக இருந்து, சமூகம் சார்ந்த விடயங்களில் முன்வந்து உதவிகள் வழங்கியும், ஒத்தாசை புரிந்தும் மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளவர்களை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை தம்மோடு சுக துக்கங்களிலும், அரசியல் ரீதிலும், அரசியலுக்கு அப்பாலும் பங்கு கொண்டவர்களையும் எதிர்காலத்தில் மக்களுக்காக செயற்படப் போகின்றவர்களையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்களித்து தெரிவு செய்ய வேண்டிய கடமை மக்களைச் சேர்ந்ததாகும்.
தேர்தல்களில் அரசியல் கட்சிகளோடு, சுயேச்சைக் குழுக்களும் வேட்பாளர்களை நிறுத்துவதற்குத் தயாராக உள்ளன. எனினும், தனி மனித செல்வாக்கே பெரும்பாலும் வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். எது எப்படியோ தமக்கு சேவை செய்யக் கூடியவர்களைத் தெரிவு செய்ய மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.