நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும், அது பெயரளவில் மட்டுமே நடைமுறையில் உள்ளது என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக பெரும்பாலான நகரங்கள் பகுதியளவும், ஏனைய சில நகரங்கள் முழுமையாக திறக்கப்பட்டிருக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது.
மதுபான சாலைகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து, ஏனைய வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவதும் நாளாந்தம் அதிகரித்து காணப்படுகின்றது. மக்கள் நடாமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில நகரங்களில் மக்கள் அதிகளவு நடமாடுவதை வியாபார நிலையங்கள் தமது அன்றாட பணிகளை முன்னெடுத்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக தலவாக்கலை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமது வாடிக்கையாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்காக வியாபார நிலையங்களை திறந்து வைத்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டாலும், அதன் உண்மையான நோக்கம் அதுவல்ல.
அரசினால் சில அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் கூட தலவாக்கலை நகரில் உள்ள வர்த்தகர்கள் பலரும் தமது விருப்பத்திற்கு அமைய பொருட்களுக்கான விலைகளை நிர்ணயித்து பொதுமக்களை தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
குறிப்பாக அரிசி சீனி பருப்பு வெங்காயம் தேங்காய் கோதுமை மா போன்ற பொருட்களுக்கு நகர வர்த்தகர்கள் முரணான வகையில் விலைகளை நிர்ணயித்து விற்பனை செய்வதாகவும் பால்மா பக்கற்றுகளை கொள்வனவு செய்ய வரும் நுகர்வோருக்கு அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வேறு பொருட்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்ற கட்டளையையும் பணித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் 350 ரூபா விலையுள்ள பால்மா பக்கட்டுக்ககளை வழங்கி ரூபாய் 900 வரை விலை கொடுத்து வாங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தலவாக்கலை நகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது நகர வர்த்தகர்களின் செயற்பாடுகள் மாத்திரம் அல்ல. குறித்த பால்மா விநியோகஸ்தர்கள் முகவர மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஆகியோர் தமது மாதாந்த வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக பொதுமக்கள் மீது சுமத்தப்படும் சுமை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வரும் பொதுமக்கள் வாடகைக்கு அமர்த்திய வாகனங்கள் ஊடாக வியாபார நிலையத்தில் இருந்து பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் சில நிமிடங்கள் குறித்த வியாபார நிலையத்திற்கு அருகில் வாகனத்தை நிறுத்தும் பட்சத்தில் பாதுகாப்பு தரப்பினர் அல்லது நகரசபையின் அதிகாரம் பெற்ற அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்திற்கான தரிப்பிட கட்டணத்தை அரை விடுவதிலும் அதேபோல் சட்டத்திற்கு முரணாக வாகனம் நிறுத்தப்பட்டிருந்த அந்த பணம் பெறுவதில் அதிக அக்கறை காட்டுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் இன்றைய தினம் குறித்த உள்ளூராட்சி மன்ற வாகனம் ஒன்று தலவாக்கலை நகரில் நுவரெலியா வீதி ஓரமாக வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கையையும் கவனிக்காது சில மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டிருந்த குறித்து பலரும் விசனம் தெரிவித்தனர்.
சாதாரண பொதுமக்கள் இவ்வாறான வாகனங்களை நிறுத்தும் போது சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் ஏன் உள்ளூராட்சி மன்றங்களின் வாகனங்களை மாத்திரம் கண்டு கொள்வதில்லை என்ற கேள்வியையும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் தொடுகின்றனர்
போக்குவரத்து சட்டம் என்பது சகலருக்கும் பொதுவான நிலையில் தலவாக்கலை நகரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு குறித்த சட்டம் பக்க சார்பு இல்லாத நிலையில் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என பலரும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
அத்துடன் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் விலை கட்டுப்பாட்டாளர்கள் என பலரும் தலவாக்கலை நகர வர்த்தகர்களை திடீர் சோதனைகளுக்கு உட்படுத்தி அங்கு நடைபெறும் முறையற்ற வகையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக நுகர்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.
நிருபர் -கௌசல்யா-