தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர் லச்சுமனன் பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக நகர சபைத் தலைவராக இருந்த அசோக்க சேபால அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இந்தப் புதிய நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
நகர சபையின் வளங்களை துஸ்பிரயோகம் செய்ததாக உறுப்பினர் ஒருவர் செய்து முறைப்பாட்டை அடுத்து, அசோக்க சேபால பதவி நீக்கப்பட்டுள்ளார். இதனையயடுத்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பரிந்துரையின் பேரில் லச்சுமனன் பாரதிதாசனுக்கு மத்திய மாகாண ஆளுநர் இந்த பதவியை வழங்கியுள்ளார்.
அத்துடன் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரித்து மூன்று மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
அசோக்க சேபால இதற்கு முன்னர் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.